"ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை ரூ.4,459 கோடியை விடுவிக்க வேண்டும்" - டெல்லியில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகை மற்றும் இழப்பீட்டுத் தொகையை வழங்க டெல்லியில் நடந்த சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
x
தமிழகத்திற்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகை மற்றும் இழப்பீட்டுத் தொகையை வழங்க டெல்லியில் நடந்த சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், டெல்லியில் இன்று நடந்த சரக்கு மற்றும் சேவை வரி மன்ற 35-வது கூட்டத்தில், அமைச்சர் ​ஜெயக்குமார்,  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பாலச்சந்திரன், சோமநாதன் ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில், சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அரசிடம் இருந்து 2017-2018 ஆம் ஆண்டிற்கு தமிழகத்துக்கு இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள நான்காயிரத்து 459 கோடி ரூபாயை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகையான 386 கோடி ரூபாயையும் வழங்க அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சினிமா டிக்கெ​ட்​டுகளை e ticketing முறையில் வழங்குவது, மாநில மற்றும் வட்டார அளவில் சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது, மின்பட்டியல் முறை அமல்படுத்துவது உள்பட பல்வேறு விசயங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கைத்தறி பொருட்கள், சீயக்காய், தீப்பெட்டி, பம்ப்செட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கவும் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்