ஒடிசா மாநில ஹீரோ - நவீன் பட்நாயக்

ஒடிசா மாநில மக்களோட அன்பிற்குரியவராகவும் 19 ஆண்டுகள் அசைக்க முடியாத ஒரு ஆட்சியை வழங்கும் பிஜூ ஜனதா தளத்தின் தலைவராகவும் இருக்குற நவீன் பட்நாயக் பற்றி பார்க்கலாம் வாங்க...
ஒடிசா மாநில ஹீரோ - நவீன் பட்நாயக்
x
மாநிலக் கட்சிகளின் பங்கு என்பது அரசியல் களத்தில் இப்போது எல்லோராலும் உற்று நோக்கப்படுகிறது. அப்படி ஒரு மாநிலத்தின் முகமாக 19 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்து தேசிய கட்சிகளையும் வியப்பில் ஆழ்த்தும் ஒரு தலைவராக இருப்பவர் தான் நவீன் பட்நாயக். ஒடிசா மாநிலத்தின் முதல்வராக, மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒருவராக இருப்பதே நவீன் பட்நாயக்கின் சிறப்பாக இருக்கிறது. 

1946ல் பிறந்த நவீன் பட்நாயக், சுதந்திர போராட்ட வீரரும், ஒடிசாவின் முதுபெரும் தலைவருமான பிஜூ பட் நாயக்கின் மகன். டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளிநாட்டில் வசித்து வந்த நவீன் பட்நாயக், ஒடிசாவிற்கு வந்த பிறகே தீவிர அரசியல் களத்தில் இறங்கினார். தந்தை பிஜூ பட்நாயக் மறைவிக்கு பிறகு 1998ல் பிஜூ ஜனதா தளம் என்ற கட்சியை உருவாக்கினார் நவீன் பட்நாயக். 

1998 நாடாளுமன்ற  தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து களமிறங்கிய பிஜூ ஜனதா தளம் 9 இடங்களில் வென்றது. அப்போது வாஜ்பாய் அரசில், சுரங்கத் துறை அமைச்சரானார் நவீன் பட்நாயக். அதன்பிறகு மத்தியில் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து அடுத்த ஆண்டே மீண்டும் தேர்தல் வந்தது. 1999 நாடாளுமன்ற தேர்தலில் 10 இடங்களில் வென்றது பிஜு ஜனதா தளம். அப்போதும் மத்திய அரசில் சுரங்கத் துறை அமைச்சராக தொடர்ந்தார் நவீன் பட்நாயக். 2000ஆம் ஆண்டு ஒடிசா சட்டமன்ற தேர்தலில் பிஜு ஜனதா தளம் 68 இடங்களை வென்று ஆட்சியை கைப்பற்றியது. மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நவீன் பட்நாயக், மாநிலத்தின் 14 வது முதலமைச்சராக பதவியேற்றார். 

அன்றிலிருந்து இன்று வரை ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து கொண்டிருப்பவர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார் நவீன் பட்நாயக். அதற்கு அடுத்து வந்த அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் மற்ற கட்சிகளை பின்னுக்கு தள்ளி பிஜூ ஜனதா தளம் மகத்தான வெற்றியை பெற்றது. பாஜகவுடன் கூட்டணியில் தொடர்ந்ததோடு 2004 நாடாளுமன்ற தேர்தலில் 11 இடங்களில் வென்றது பிஜு ஜனதா தளம். 2009 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகினார், நவீன் பட்நாயக். இதன் மூலம் 11 ஆண்டு கால கூட்டணி முடிவுக்கு வந்தது. 

தனித்து நின்றாலும் தனித்துவம் பெரும் வகையில் 2009 நாடாளுமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட்டு 14 இடங்களில் வென்றது பிஜு ஜனதா தளம். கடந்த 2014 தேர்தலின் போது 21 தொகுதிகள் கொண்ட ஒடிசாவில்20 தொகுதிகளை கைப்பற்றி பாஜக காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது பிஜு ஜனதா தளம். இந்த சூழலில் தான்  இந்த தேர்தலையும் தனித்தே எதிர்கொண்டார் நவீன் பட்நாயக். மாநிலத்தில் பாஜக காலூன்ற நினைத்தாலும் அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல்  மக்களிடையே பிரசாரம் செய்தார் நவீன் பட்நாயக். பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு என்பதை அரசியல் கட்சிகள் வார்த்தைகளில் பேசி வரும் நிலையில் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தவர் நவீன். 

நடந்து முடிந்த தேர்தலில் தன் கட்சி சார்பில் 7 பெண்களுக்கு வாய்ப்பளித்தவர் நவீன். இவரின் இந்த செயலுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பும் எழுந்தது. வயதான ஒரு தலைவர் உங்களுக்கு எப்படி நல்லது செய்வார், என்ற பாஜகவின் எதிர்மறை பிரசாரங்களை எல்லாம் முறியடித்து துடிப்பான ஒரு முதலமைச்சராகவே இன்றும் தொடர்கிறார். தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளின் சதியை முறியடிக்கும் வகையில், உற்சாகமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு அவர்களின் வாயை அடைத்தார் நவீன். ஃபானி புயல் பாதிப்பில் இருந்து ஒடிசா மாநிலத்தை முன்கூட்டியே பாதுகாத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 

தன்னுடைய ஒரு ஆண்டு சம்பளத்தை ஃபானி புயல் பாதிப்புக்காக வழங்கியதன் மூலம் மக்களின் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்தார். திருமணம் செய்து கொள்ளாமல் முழு நேர  அரசியல்வாதியாக மக்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படும் ஒரு தனிப்பெரும் தலைவராகவும் இவர் இருக்கிறார். 

பாஜக, காங்கிரஸ் அல்லாத 3வது அணி உருவாக வேண்டிய சூழல் இந்திய அரசியலில் ஏற்பட்டால் அதில் நிச்சயம் நவீன் பட்நாயக்கிற்கும் இடமிருக்கும். இந்தியாவின் சிறந்த ஒரு தலைவராக, நேர்மையான ஒரு மனிதராக மக்கள் மத்தியில் உயர்ந்து இருக்கிறார் நவீன் பட்நாயக்... 


Next Story

மேலும் செய்திகள்