தேமுதிகவின் கடந்த கால கூட்டணி நிலைப்பாடு...

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேமுதிக நீண்ட இழுபறிக்கு பின் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
தேமுதிகவின் கடந்த கால கூட்டணி நிலைப்பாடு...
x
2005ஆம் ஆண்டு மதுரையில் மிகப் பெரிய மாநாட்டை நடத்தி தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை விஜயகாந்த் தொடங்கினார். ஆரம்ப காலத்தில் கடவுளோடும் மக்களோடும் தான் கூட்டணி என்றும்,  கூட்டணிக்காக கட்சியை அடமானம் வைக்கமாட்டேன் என்றும் விஜயகாந்த் கூறியதை கேட்டு தேமுதிக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.     

தேமுதிக தொடங்கி ஓராண்டு நிறைவடையாத நிலையில் 2006ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல், 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் தனித்து போட்டியிட்டது.  கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து. 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார். 

2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட தேமுதிக வெற்றி பெறவில்லை.அதன் வாக்கு சதவீதம் பெருமளவு குறைந்தது. இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற தேமுதிக ஆரம்பம் முதலே ஆர்வமுடன் இருந்தது.  ஆனால் அதிமுக கூட்டணியில் பாமகவுடன் முதலில் ஒப்பந்தம் போட்டதால் தேமுதிக அதிருப்தி அடைந்தது. 

இதனால் அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வேண்டும் என பாஜக தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விஜயகாந்தை சந்தித்தார். 

இதேபோல் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் விஜயகாந்த்தை சந்தித்தனர். இச்சந்திப்பு கூட்டணி தொடர்பாக என கூறப்பட்டாலும் சம்பந்தப்பட்டவர்கள் மறுத்தனர். இந்நிலையில் சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற பிரதமர் மோடி பிரசார கூட்டத்தில் அதிமுக கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். அதில் விஜயகாந்தும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அன்றைய தினம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தேமுதிக துணை பொது செயலாளர் சுதீஷ் நடத்திய பேச்சு வார்தையில் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. அன்றே திமுக கூட்டணியில் சேருவது தொடர்பாக சுதிஷ் தம்முடன் தொலைபேசியில் பேசியதாக துரைமுருகன் கூறியது தேமுதிகவுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இதை சுதிஷ் திட்டவட்டமாக மறுத்தார். 

இந்நிலையில் தேமுதிக கூட்டணி நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அக்கட்சி பொருளாளர் பிரேமலதா ஒருமையில் பேசியதாக புகார்கள் எழுந்தன. அதிமுக எம்பிக்கள் குறித்து அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையை எழுப்பின. இதற்கு அமைச்சர்கள் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நீண்ட இழுபறி மற்றும் பேச்சுவார்தைக்கு பின் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்