விதிமீறி கட்டப்பட்ட 40 மாடி கட்டடம் - கட்டடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை கோபுர கட்டடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
டெல்லி அருகே நொய்டாவில் சூப்பர்டெக் எனும் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 மாடிகள் கொண்ட இரட்டை கோபுர குடியிருப்பை  கட்டியது. இந்த கட்டடத்தில் 900-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

ஆனால் இந்த இரட்டை கோபுர கட்டடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், இதனை இடிக்க அலகபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, அலகபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.

அதிகாரிகள் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் தவறால் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள் தான் என கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், சூப்பர்டெக் நிறுவனம் தனது சொந்த செலவில் இன்னும் 3 மாதங்களுக்குள் கட்டடத்தை இடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

இதேபோல், கேரள மாநிலம் கொச்சியில் விதிகளை மீறி  கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு, உச்சநீதிமன்ற உத்தரவால், கடந்த 2020 ஜனவரி மாதம் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது.

இதேபோல, மும்பையில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு சொந்தமான கட்டடத்தின் ஒரு பகுதி, சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து கடந்த ஆண்டு இடிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் கங்கனா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அவருக்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்