கொரோனாவால் ஆதரவற்று நிற்கும் 3,621 சிறார்கள் - பெற்றோரை இழந்து தவிப்பு

கொரோனா பெருந்தொற்று காலத்தில், நாடு முழுவதும் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகள் பற்றிய புள்ளி விவரங்களை தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது.
x
கொரோனா பெருந்தொற்று காலத்தில், நாடு முழுவதும்  பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகள் பற்றிய புள்ளி விவரங்களை  தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது.  

இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா, பலரது வாழ்க்கையை சிதைத்து விட்டது. பல்லாயிரக்கணக்கான பாதிப்புகளும், மரணங்களும் நூற்றாண்டுகளில் இல்லாத பேரழிவுக்கு சாட்சியாக மாறியிருக்கின்றன. இந்த பெரும் தொற்றில் எண்ணற்ற குழந்தைகள் தாய், தந்தையரை இழந்து ஆதரவற்று நிர்கதியாக கோர வடுக்களை சுமந்து நிற்கின்றனர். 

 
கடந்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல்  இந்த ஆண்டு  ஜூன் 5 ஆம் தேதி வரை நாடு முழுவதும் 3 ஆயிரத்து 621 குழந்தைகள், பெற்றோர்களை இழந்து நிற்கதியாக நிற்பதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது.


கொரோனா பரவலுக்கு மத்தியில் பாதுகாப்பு இல்லங்களில் இருக்கும் சிறுவர்களின் நலன் குறித்த வழக்கை தாமாக முன்வைத்து விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்தில், தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் பதில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. 


அதில், 3 ஆயிரத்து 621 குழந்தைகள் தங்களுடைய தாய், தந்தையரை இழந்துள்ளனர் என்றும் 

26 ஆயிரத்து 176 குழந்தைகள் தாய், தந்தை இருவரில் ஒருவரை இழந்து உள்ளனர் என்றும்

 274 குழந்தைகள் கைவிடப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளது.


இந்த 30 ஆயிரத்து 71 குழந்தைகளில் 15 ஆயிரத்து 620 பேர் சிறுவர்கள் எனவும் 14 ஆயிரத்து 447 பேர் சிறுமிகள் எனவும் 4 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இவர்களில் 11 ஆயிரத்து 815 சிறுவர், சிறுமியர் 8 முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் 5 ஆயிரத்து 17 பேர் 4 முதல் 7 வயதுக்குட்டப்பட்வர்கள் என்றும் ஆணையம் கூறியிருக்கிறது. 


இந்த குழந்தைகளின் பெற்றோர் மரணத்திற்கு கொரோனா தொற்று மட்டும் காரணமாக சொல்ல முடியாது என்றும், இதர காரணங்களும் இருக்கலாம் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. 


 இவ்வாறு ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் விபரங்களை யாருக்கும் வழங்கவும் கூடாது, பொதுவெளியில் வெளியிடவும் கூடாது என மாநிலங்களுக்கு உத்தரவிட கேட்டுக் கொண்டுள்ள ஆணையம், 


இதுபோன்ற தகவல் பகிரப்பட்டால் குழந்தை கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களால், அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்