(22.10.2020) இன்றைய இந்தியா செய்திகள்

(22.10.2020) இன்றைய இந்தியா செய்திகள்
(22.10.2020) இன்றைய இந்தியா செய்திகள்
x
வெங்காய இறக்குமதிக்கான தடைகள் தளர்வு - விலை உயர்வை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை

வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. டிசம்பர் 15ம் தேதி வரை இந்த தளர்வுகள் அமலில் இருக்கும் என மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் விதமாக கடந்த செப்டம்பர் முதலே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் படி செப்டம்பர் 2வது வாரம் முதலே மத்திய அரசின் கையிருப்பில் உள்ள வெங்காயத்தை சில்லறை விற்பனை கடைகளுக்கு வழங்கி வருவதாகவும், வரும் நாட்களிலும் இந்த நடவடிக்கை தொடரும் எனவும் மத்திய அரசு கூ​றியுள்ளது. 

மேலும் 8,369 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,61,841 ஆக உயர்வு

கேரளாவில் மேலும் 8 ஆயிரத்து 369 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்து 841 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் மேலும் 26 பேர் மரணமடைந்த நிலையில், கேரளாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 232 ஆக உயர்ந்துள்ளது. 

2ஜி மேல்முறையீடு மனு மீதான விசாரணை;"விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும்" - எதிர்மனுதாரர் கரீம் மொரானி வாதம்

2-ஜி மேல்முறையீடு மனுக்கள் அனுமதி மீதான 12-வது நாள் தொடர் விசாரணை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி அமர்வு முன் நடைபெற்றது. எதிர்மனுதாரர் கரீம் மொரானி சார்பில் மூத்த வழக்குரைஞர் சுதீர் நந்த்ரஜோக் வாதிடுகையில், ஊழல் தடுப்பு திருத்த சட்டம் தொடர்பான மனுக்களை டெல்லி உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை 2ஜி மேல்முறையீடு அனுமதி மனுக்கள் மீதான விசாரணையை காலவரையின்றி நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து,  விசாரணையை நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி தள்ளி வைத்தார்.

காங். மூத்த தலைவர் கமல்நாத் கூறிய கருத்தால் சர்ச்சை- கமல்நாத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

மத்திய பிரதேச அமைச்சர் இமார்டி தேவிக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர்  கமல்நாத் தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 48 மணி நேரத்திற்குள் இதற்கான உரிய விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 18 ஆம் தேதி குவாலியர் டப்ராவில் கமல்நாத் பேசியபோது அவர் தேர்தல் விதிமுறைகளுக்கு மீறி செயல்பட்டது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் ஆன்-லைன் பண பரிமாற்றம் - ஒரே மாதத்தில் ரூ. 3 லட்சம் கோடிக்கு மேல் பண பரிமாற்றம் 

நடப்பு அக்டோபர் மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் 128 கோடி யு.பி.ஐ.  ஆன்-லைன் பரிவர்த்தனைகள் நடந்து இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் மட்டும் 2 புள்ளி 41 லட்சம் கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது. அதேநேரம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 180 கோடி பரிவர்த்தனைகளும் அதன் மூலம் 3 புள்ளி 29 லட்சம் கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரித்ததே இதற்கு காரணம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. அதேபோல் அடுத்த ஆண்டு புது உச்சமாக 215 கோடி பரிவர்த்தனை வரை சுலபமாக நடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் சரிவு - மும்பை, நிப்டி பங்கு சந்தைகள் முடிவுகளில் ஏற்றம் 

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 21 காசுகள் குறைந்து 73 புள்ளி 70 ரூபாய் ஆக உள்ளது. அதேநேரம் மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 162 புள்ளிகள் அதிகரித்து, 40 ஆயிரத்து 707ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண் நிப்டியும் 40 புள்ளிகள் அதிகரித்து, 11 ஆயிரத்து 937 புள்ளிகளில் நிலைபெற்று உள்ளது. கச்சா எண்ணை விலை பீப்பாய் ஒன்றுக்கு 42 புள்ளி 93 டாலராக உள்ளது. 

கொரோனா எதிரொலி - பி.எப். உறுப்பினர்கள் எண்ணிக்கை சரிவு
  
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியகத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்து 10 புள்ளி 5 லட்சத்தை எட்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஜூலை மாதத்தில் 7 புள்ளி 48 லட்சமாக குறைந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை தற்போது ஊரடங்கு தளர்வு உள்ளிட்ட காரணங்களால் மீண்டும் அதிகரித்து வருவதாக தேசிய தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.   

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா= மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருட்காட்சி

நவராத்திரி 6-வது நாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  வசந்த உற்சவ மற்றும் புஷ்ப உற்சவ விழா கோலகலமாக நடைபெற்றது. மலையப்ப சுவாமி அம்பாள் பூதேவி மற்றும் ஸ்ரீ தேவியுடன் இணைந்து புஷ்ப வாகனத்தில் பக்தர்களுக்கு  அருட்காட்சி அளித்தார். ஆராதனை உள்பட சிறப்பு பூஜைகளுக்கு பின் சுவாமி கல்யாண உற்சவ மண்டபத்தில் வலம் வந்தார்.   








Next Story

மேலும் செய்திகள்