மும்பை தமிழர்களை அச்சுறுத்தும் கொரோனா...
மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியில் கொரோனா பரவி வருவதால் மகாராஷ்டிர போலீசார் சீல் வைத்துள்ளனர்.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக அறியப்படும் தாராவியில் கொரோனா வைரசால் 4 பேர் உயிரிழந்த நிலையில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நெருக்கமான குடியிருப்புகள் இருப்பதோடு வீடுகளும் மிகச்சிறிய அளவிலானவை என்பதால் தாராவியில் சமூக விலகலை அமல்படுத்துவது சவாலானதாக மாறியுள்ளது. 2 சதுர கிலோமீட்டருக்கு சற்றே அதிகமாக பரப்பளவு கொண்ட தாராவியில் சுமார் 10 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெருநகரின் தொழில் வாய்ப்புகளை நம்பி வந்தவர்கள். தாராவியில் கொரோனா பரவத் தொடங்கியுள்ள நிலையில் விபரீத விளைவுகளைத் தவிர்க்க மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் நடவடிக்கையாக தாராவி பகுதிக்கு செல்லும் அனைத்து பாதைகளும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை நடவடிக்கைகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நகரின் முக்கிய வீதிகளில் பொதுமக்கள் வெளியே வருவதை கட்டுப்படுத்தும் விதமாக போலீசாரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். குடிசைப்பகுதிகளில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடினால் நிலைமை கைமீறிவிடும் என்பதை உணர்ந்து கொண்டுள்ள மகாராஷ்டிர அரசு ஏற்கெனவே ஊரடங்கை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
Next Story

