"ஆந்திர தலைநகராக அமையுமா அமராவதி?"

ஆந்திர மாநிலத்தின், புதிய தலைநகராக உருவான அமராவதி நகரின் கட்டமைப்பு பணிகளை நிறுத்தி வைக்க அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
x
தெலுங்கான மாநிலத்தில் இருந்து ஆந்திர மாநிலம் 2014 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட பின்னர், ஆந்திராவிற்கு தலைநகர் இல்லாமல் இருந்தது.

பத்து ஆண்டுகள் ஹைதராபாத்தை தலைநகராகக் கொண்டு செயல்பட மத்திய அரசு அறிவுறுத்தியது.

ஆனால், ஆந்திராவுக்கு  தனி தலைநகரம் வேண்டும் என நினைத்த அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒரு இடத்தை தேர்வு செய்தார்

அதற்கு அமராவதி என பெயரிட்டு,  அங்குள்ள விவசாயிகளிடம்  நிலங்களை பெற்று சர்வதேச தரத்திலான நகரை  உருவாக்கும் பணிகளை தொடங்கினார்.

சிங்கப்பூர், லண்டன் போன்ற நகரங்களிலிருந்து  வல்லுநர்களின் ஆலோசனை பெற்றதுடன், சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தார்.

உலகத்திலேயே மிக சிறந்த தலை நகரமாக உருவாக்க வேண்டும் என்பது சந்திரபாபு நாயுடுவின் கனவாக இருந்தது. 

விவசாயிகளிடம் நிலங்களை பெற்று, அதற்கான பணம் வங்கிகளில் செலுத்தப்பட்டதுடன், நகரம் உருவான பின் அவர்களுக்கு ஒரு இடம் தருவதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெகன்மோகன் ரெட்டி  முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

அந்த சமயத்தில், கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அமராவதி நகருக்குள் வெள்ளம் சூழ்ந்து ஆங்காங்கே நீர் தேங்கியது.
  
முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தங்கியிருந்த வீட்டிற்கு அருகே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், அந்த வீடு உள்பட பத்துக்கும் மேற்பட்ட வீடுகளை காலி செய்ய ஜெகன்மோகன் ரெட்டி உத்தவிட்டார்.

இந்த நிலையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில், ஐந்து  பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, தலைநகரை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது.

ஆண்டுக்கு 300 நாட்கள் விவசாயம்  நடக்கும் பசுமையான நிலப்பகுதியில் தலைநகரை அமைக்க விவசாயிகளிடம் நிலங்களைப் பெற்றுக் கொண்டதாக தற்போது தெரியவந்துள்ளது.

தலைநகரை ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவழித்து உருவாக்குவதை விட, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பணத்தை செலவிடலாம் என தற்போது ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆட்சி மாற்றம் நடந்தால், காட்சிகளும் மாறுவது ஆந்திராவிலும் நடப்பதாக அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்