மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் நீடிக்கும் இழுபறி : ஆளுநருடன் இன்று சிவசேனா நிர்வாகிகள் சந்திப்பு

மகாராஷ்டிராவில் தனி பெரும்பான்மை பெற்ற கட்சியை ஆட்சியமைக்க அழைக்குமாறு, அம்மாநில ஆளுநரை, இன்று சிவசேனா கட்சியினர் நேரில் வலியுறுத்த உள்ளனர்.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் நீடிக்கும் இழுபறி : ஆளுநருடன் இன்று சிவசேனா நிர்வாகிகள் சந்திப்பு
x
மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பா.ஜ.க. 105 தொகுதிகளையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இருப்பினும், ஆட்சி அமைப்பதில் சம பங்கு வேண்டும் என சிவசேனா பிடிவாதமாக இருப்பதால் அங்கு குழப்பம் நீடித்து வருகிறது. 

தங்களின் திட்டத்திற்கு பா.ஜ.க. உடன்படாவிட்டால் தேசிய காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாமா? என சிவசேனா யோசித்து வருகின்றது. சிவசேனாவுக்கு 170-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இன்று, ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சந்திக்க உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, மும்பையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், கட்சி நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டார். அக்கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாரை தொடர்பு கொள்ள,  சஞ்சய் ராவத் முயற்சித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதேவேளையில், பாஜக சட்டமன்ற குழு தலைவராக தேர்வாகியுள்ள தேவேந்திர பட்னாவிஸ், ஆட்சியமைப்பதில் நிலவி வரும் இழுபறி விரைவில் முடிவுக்கு வரும் என்றும்,  விரைவில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். வரும் 9ஆம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவையின் ஆயுள்காலம் முடியும் நிலையில், டெல்லியில் இன்று அமித்ஷாவை தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்