கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் : 4 பேர் கேரள போலீசாரால் சுட்டுக்கொலை

கேரள வனப்பகுதியில் 4 மாவோயிஸ்ட்டுகளை சுட்டு கொன்ற அம்மாநில போலீசார் தப்பியோடிய மாவோயிஸ்டுகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் : 4 பேர் கேரள போலீசாரால் சுட்டுக்கொலை
x
கேரளாவின் பாலக்காட்டை அடுத்த மஞ்சக்கட்டி வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் தீவிர பயற்சியில் ஈடுபட்டு வருவதாக அம்மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மலை கிராமங்களை சேர்ந்த இளைஞர்களை மூளை சலவை செய்து மாவோயிஸ்டுகள் தங்களுடன் இணைத்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கேரள அரசு அமைத்துள்ள தண்டர்போல்ட் படையை சேர்ந்த போலீசார்  மஞ்சக்கட்டி வனப்பகுதியில் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது கேரள போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதி உள்ளிட்ட 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். இரண்டாவது நாளாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட கேரள போலீசார்  மணிவாசகம் என்ற மாவோயிஸ்ட்டை சுட்டு கொன்றனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.   இந்த மோதலில் குண்டு பாய்ந்த 3 மாவோயிஸ்ட்கள் தப்பியோடி விட்டதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களை தீவிரமாக தேடி வரும் நிலையில், உயிரிழந்த மாவோயிஸ்ட்களின் உடல்களை பாலக்காடு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின்  சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள ராமமூர்த்தி நகர் கிராமம் என்று தெரிய வந்துள்ளது. 55 வயதான மணிவாசகம் கேரளா, கபணி, நடுகனி, பவானி பகுதிகளில் தலைமறைவாக இருந்து வந்ததாகவும், மணிவாசகத்திற்கு மனைவி,  குழந்தைகள் கிடையாது என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மணிவாசத்தின் சகோதரி சந்திராவும் மாவோயிஸ்ட் என்பதால்  
அவரை திருப்பூர் போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மாவோயிஸ்ட் மணிவாசகம் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் ஓமலூர் பகுதியில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். 

இதனிடையே மாவோயிஸ்ட்களை, கேரள போலீசார் சுட்டு கொன்றதற்கு அம்மாநில  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் , எதிர்கட்சி 
தலைவருமான ரமேஷ் சென்னிதலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாவோயிஸ்டுகளை கைது செய்து சட்டத்திற்கு முன்பு நிறுத்துவதற்கு 
பதிலாக அவர்களை கேரள போலீசார் கொன்று வருவதாகவும் , ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் ரமேஷ் சென்னி தலா தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்