அயோத்தி வழக்கு - கடந்து வந்த பாதை

அயோத்தி வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ள நிலையில் வழக்கு கடந்து வந்த பாதை...
அயோத்தி வழக்கு - கடந்து வந்த பாதை
x
கடந்த 1992-ம் ஆண்டு, டிசம்பர் 6-ம் தேதி, பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் நாடு முழுவதும் சர்ச்சை வெடித்தது. இதனால் 1993-ம் ஆண்டு,  67 புள்ளி 7 ஏக்கர் அயோத்தி நிலத்தை, மத்திய அரசு கையகப்படுத்தியது. இதை தொடர்ந்து,  அந்த இடம் அரசுக்கா, இந்துத்வா அமைப்புகளுக்கா அல்லது வக்பு போர்டு வாரியத்துக்கு சொந்தமா என பிரச்சனை எழுந்தது. 

இதுதொடர்பான வழக்கை விசாரித்த  அலகாபாத் உயர்நீதிமன்றம்,   சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடமே என்று, 2010-ஆம் ஆண்டில்  தீர்ப்பளித்தது. மேலும், சர்ச்சைக்குரிய 2 புள்ளி 77 ​ஏக்கர் நிலம், மூன்றாக பிரிக்கப்பட்டு, சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து மகாசபை உச்சநீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்தது.  இந்த மேல் முறையீட்டு மனுவை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், 2011-ம் ஆண்டு, மே மாதத்தில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒத்தி வைத்தது.இந்த பிரச்னையை தீர்க்க,  ஒய்வு பெற்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில், நீதிபதி பக்கீர் முகமது, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய மூன்று உறுப்பினர்கள் கொண்ட சமரசக் குழுவை 2019-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி உச்சநீதிமன்றம் அமைத்தது. இந்த சமரசக் குழு, தனது அறிக்கையை 8 வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.

சமரசக் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதை தொடர்ந்து, 2019-ம் ஆண்டு  ஆகஸ்டு 6-ம் தேதி  முதல், நாள்தோறும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு, தொடர்ந்து விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆகஸ்ட் 6ந் தேதி முதல் 39 நாட்களாக நாள்தோறும் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. புதன்கிழமை இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது, இந்து மகாசபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஷ் சிங், நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான புத்தகம் ஒன்றை தாக்கல் செய்ய முயன்றார். இதற்கு சன்னி வக்பூ வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவன் கடும் எதிர்ப்பு தெரிவித்து, புத்தகத்தில் உள்ளவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும், அதனை கிழிக்கவும் அனுமதி கோரினார். 

உங்கள் விருப்பம் போல செய்யுங்கள் என்று தலைமை நீதிபதி கூறியதை அடுத்து அவர் புத்தகத்தை கிழித்தார். இதனால் ஆத்திரமடைந்த தலைமை நீதிபதி, இந்த நீதிமன்றத்தின் மாண்பு கெட்டு போனதாகவும், இதுபோன்று நடக்க அனுமதிக்க முடியாது என்றும் எச்சரித்தார். மேலும், வழக்கு விசாரணையில் இருந்து எழுந்து சென்றுவிடுவேன் எனவும் அவர் கோபமாக தெரிவித்தார். இப்படி பரபரப்புடன், நடைபெற்று வந்த விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்