விமானநிலையம், துறைமுகங்கள் வழியாக கடத்தல் அதிகரிப்பு... கடத்தல்காரர்களை குறி வைத்து பிடிக்கும் சுங்கத்துறை அதிகாரிகள்

சென்னை விமான நிலையத்தில், நடப்பாண்டில் மட்டும் 270 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானநிலையம், துறைமுகங்கள் வழியாக கடத்தல் அதிகரிப்பு... கடத்தல்காரர்களை குறி வைத்து பிடிக்கும் சுங்கத்துறை அதிகாரிகள்
x
சென்னை விமான நிலையம் தெற்காசியாவிலேயே முக்கியமான விமான நிலையமாக செயல்பட்டு வருகிறது. தினந்தோறும், சுமார் 35 பன்னாட்டு விமானங்கள் இங்கு வந்து செல்கின்றன. நாளொன்றுக்கு சுமார் 65 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் போன்று, கடத்தல்காரர்கள் பலரும் வந்து செல்கின்றனர். இதேபோல துறைமுகங்கள் வழியாகவும் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய கடத்தல்காரர்களை கண் கொத்தி பாம்பாக கண்காணித்து வருகின்றனர் சுங்கத்துறை அதிகாரிகள். 2017- 18 மற்றும் 2018- 19ம் ஆண்டு விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் பொருட்கள் மற்றும்  வழக்கு விவரங்களை சுங்கத்துறை வெளியிட்டுள்ளது. 

2017- 18ம் ஆண்டில் சென்னையில் இருந்து வெளிநாடு, வெளிநாட்டில் இருந்து சென்னை என கடத்தப்பட்ட சுமார் 161 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், இதுதொடர்பாக 361 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதேபோல, 6 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து, 76 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், செம்மரக்கட்டைகள், வன உயிரினங்கள் என 3 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக161 வழக்குகளை பதிந்துள்ளனர். இதே ஆண்டில் மொத்தமாக, விமான நிலையம், துறைமுகங்கள் என 552 கடத்தல் வழக்குகளை பதிவு செய்து, 56 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தல் ஆசாமிகள் 74 பேரை சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தங்கம் கடத்துவது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 46 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள சுங்கத்துறையினர், தற்போது வரை 87 கோடி ரூபாய் மதிப்பிலான 270 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 461 வழக்குகளையும் பதிவு செய்துள்ளனர். இதேபோல, வெளிநாட்டு பணம் கடத்தலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 48 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறும் சுங்கத்துறை அதிகாரிகள், கடத்த முயன்ற 9 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 100 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இதுமட்டுமின்றி, 4 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து, 215 வழக்குகளையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர். 2018-19ல் மட்டும் மொத்தமாக 776 கடத்தல் வழக்குகளை பதிவு செய்துள்ள சுங்கத்துறையினர், 77 கடத்தல்காரர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள், தங்கம், ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதில் சஹாரா பாலைவனத்தில் மட்டும் காணப்படும் அரிய வகை கொம்பு வகை பாம்புகளை பறிமுதல் செய்து வனத்துறையிடம் ஒப்படைத்த சுங்கத்துறையினர், 8 லட்ச ரூபாய் மதிப்பிலான அரிய வகை சுறா மீன்களின் துடுப்புகள், சிறுத்தை குட்டி ஆகியவற்றை கடத்த முயன்ற கும்பலையும் கைது செய்தனர்.

சென்னை துறைமுகத்தில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்படவிருந்த 19 டன் செம்மர கட்டைகள், 20 கிலோ குங்குமப்பூ ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன், கடத்தல் கும்பலையும் கைது செய்தனர். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகள் இருந்தாலும், இது போன்ற திருட்டு, கடத்தலை சுங்கத்துறை அதிகாரிகள் சிறப்பாக தடுத்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்