மும்பையில் கொட்டும் கனமழை... மூழ்கடித்த வெள்ளம்...

44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மும்பையில் பெய்துவரும் கனமழையால், பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
மும்பையில் கொட்டும் கனமழை... மூழ்கடித்த வெள்ளம்...
x
44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மும்பையில் பெய்துவரும் கனமழையால், பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சாலை மற்றும் விமான போக்குவரத்து முடங்கின. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 

கனமழை வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில், ஷியான் பகுதி வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளது. தொடர் மழை வெள்ளத்தில், ஷியான் மற்றும் தானே ரயில் நிலையங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. உள்ளூர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரின் உயிரையும் கனமழை பறித்து சென்றிருக்கிறது. தொடர் மழை, வெள்ளப்பெருக்கு, இயல்பு வாழ்க்கை முடக்கம் என தத்தளிக்கும் மும்பையின் நிலையை, கட்டுப்பாட்டு அறைக்கு சென்று முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நவிஸ் பார்வையிட்டார். நளா சோபரா, பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. டுலின்ஸ் காவல் நிலையமே தண்ணீரில் தத்தளிக்கிறது.

மும்பையில் மேற்கு அதிவிரைவுச் சாலை மழைநீரில் மூழ்கியுள்ளதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் காந்தி மார்க்கெட்டில், காய்கறிகளுக்கு பதில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பந்தாரா அதிவிரைவுச் சாலை, போக்குவரத்து நெரிசலில் விழிபிதுங்கியுள்ளது. 44 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதாகவும், தொடர்மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. மிக அவசரம் ஏற்படாதவரை, வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மாநில அரசு எச்சரித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட மீட்புக் குழுவினர் களம்  இறக்கப்பட்டுள்ளனர்.

250-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து

மும்பையில் கடந்த 24 நேரத்தில் மட்டும் 40 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். ஆனால்  கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 20 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் துல்லியமாக அறிவித்துள்ளது. மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மும்பையில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்கள் உள்ளிட்டவற்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மும்பையில் பேருந்து, ரயில் மற்றும் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில் நிலையங்கள்  வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. 250க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 50 க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.  

சுவர் இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழப்பு 

மும்பையின் மலாடா கிழக்கு பகுதியான பிம்பிரிடாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர்.  இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த  பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள்  மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மீட்பு பணி தீவிரம்

இதேபோல், புனேயில் உள்ள சிங்காத் கல்லூரி சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகினர். கல்யாண் பகுதியில் உள்ள தேசிய உருது பள்ளி கட்டிட சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்