ஒடிசாவில் கரை கடந்த ஃபானி புயல் : கொட்டி தீர்த்த கனமழை - வேரோடு சாய்ந்த மரங்கள்

ஒடிசா மாநிலத்தில் கரை கடந்த ஃபானி புயல் அம்மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் கரை கடந்த ஃபானி புயல் : கொட்டி தீர்த்த கனமழை - வேரோடு சாய்ந்த மரங்கள்
x
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ஃபானி புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த புயல் திசைமாறி ஒடிசா மாநிலம் கோபால்பூர் - சந்த்பாலிக்கு இடையே இன்று காலை 8 மணி முதல் கரையை கடக்க தொடங்கியது. அப்போது பூரி, கோபால்பூர் உள்ளிட்ட இடங்களில் மணிக்கு சுமார் 140 முதல் 180 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த  காற்று வீசியது. இதில் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. வீட்டின் கூரைகள் பறந்தன. ஏராளமான வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருவதால்  பொதுமக்கள் பீதி அடைந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 11 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளிலும் பலத்த காற்றும், மழையும் கொட்டி தீர்த்தது. வலுவிழந்த ஃபானி புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தை நோக்கி நகரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்து வரும் நாட்களில் அங்கு காற்றுடன் கூடிய கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஃபானி புயல் - ஒடிசா  தலைமை செயலாளர் ஆலோசனை 



ஒடிசா மாநிலத்தில் ஃபானி புயல் பயங்கர சேதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தலைநகர் புவனேஸ்வரில், அம்மாநில தலைமை செயலாளர் ஆதித்ய பிரசாத் அவசர ஆலோசனை நடத்தினார். அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனிடையே கோபால்பூர் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 

தயார் நிலையில் பேரிடர் மீட்பு, நிவாரண குழுக்கள்



ஒடிசாவில் ஃபானி புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மீட்பு  பணிகளுக்காக 34 பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண குழுக்களை கடற்படை தயார் நிலையில் வைத்துள்ளது. விசாகப்பட்டினம், சென்னை, கோபால்பூர், ஹால்டா உள்ளிட்ட இடங்களில் பேரிடர் மீட்பு நிவாரண குழுவினர்  தயார் நிலையில் உள்ளனர். மேலும் சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் 4 கடற்படை கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

மேற்கு வங்காளத்தில் கனமழை: 

ஃபானி புயல் காரணமாக, மேற்கு வங்க மாநில கடலோர பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்