12 ஆண்டுகளில் 23 நாடுகளை சுற்றிய தம்பதி : டீக்கடை வருமானத்தில் உலகம் சுற்றும் சாமானியர்கள்

கடந்த 12 ஆண்டுகளில், சுமார் 23 உலக நாடுகளைச் சுற்றியுள்ள கேரள தம்பதியரின், தன்னம்பிக்கை முயற்சியை பதிவு செய்கிறது இந்த தொகுப்பு...
12 ஆண்டுகளில் 23 நாடுகளை சுற்றிய தம்பதி : டீக்கடை வருமானத்தில் உலகம் சுற்றும் சாமானியர்கள்
x
"வாழ்க்கை அழகானது... நாங்கள் அதனை அனுபவிக்கிறோம்" என்று கூறும் இந்த தம்பதியர், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்கள்... ஆனால், உழைக்க தயங்காதவர்கள்... கடும் உழைப்பினால் வந்த வருமானத்தில், உலகத்தை சுற்றிக் கொண்டிருக்கின்றனர்...கேரள மாநிலம் கொச்சினில், 'ஸ்ரீ பாலாஜி காபி ஹவுஸ்' என்ற டீக்கடையை நடத்தி வரும் விஜயனுக்கு 69 வயது. இவரது மனைவி மோகனாவிற்கு 67 வயது. இவர்களுக்குத் திருமணமாகி 45 ஆண்டுகள் ஆகிறது. 

இவர்களுக்கு, சிறுவயதில் இருந்தே இந்த உலகை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற மனம் இருந்தாலும், அதற்கு பணம் ஒரு தடையாகவே இருந்துள்ளது...கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்னர், 1963 ஆம் ஆண்டு, டீக்கடை ஒன்றை ஆரம்பித்த விஜயன், அதன் மூலம் வரும் பணத்தை தமது உலகம் சுற்றும் கனவுக்காக சேர்த்து வைத்தார். 

சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, நியூயார்க் உள்ளிட்ட நாடுகள் விஜயனுக்கு மிகவும் பிடித்தமானவை. பிரேசில், அர்ஜெண்டினா, பெரு உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்று வந்துள்ளனர். அடுத்து சுவீடன், டென்மார்க், ஹோலண்ட், கிரீன்லேண்ட், நார்வே உள்ளிட்ட நாடுகளைச் சுற்றிப் பார்க்க திட்டமிட்டுள்ளனர். உலக நாடுகளைச் சுற்றுவதன்மூலம், தங்கறது எண்ணங்களும் கலாச்சாரங்களும் மாற்றமடையும் என, நம்பிக்கையுடன் கூறுகிறார் விஜயன்... 

தமது டீக்கடையின் வருமானத்தை மட்டும் வைத்து, கடந்த 12 ஆண்டுகளில், இதுவரை 23 நாடுகளைச் சுற்றியுள்ளனர் விஜயன் மோகனா தம்பதியினர். இவர்கள் தங்களது, டீக்கடையில் வேறு யாரையும் பணியமர்த்தவில்லை. இவர்களே முதலாளிகள்... இவர்களே வேலைக்காரர்கள்...  

பயணம் மேற்கொள்ள பணம் பற்றாக்குறை என்றால், வங்கியில் கடன் வாங்குகின்றனர். பயணம் சென்று வந்த பின்னர்,  அந்தக் கடனை 3 ஆண்டுக்குள் திருப்பிச் செலுத்திவிட்டு, அடுத்த பயணத்திற்கு திட்டமிட்டு பயணிக்கின்றனர். இந்த உலகத்தை சுற்ற கோடிக்கணக்கில் பணம் தேவையில்லை... விஜயன் -  மோகனா தம்பதியரை பின்பற்றினாலே போதுமானது... 

Next Story

மேலும் செய்திகள்