'2 பாய்ன்ட் ஓ' திரைப்படத்தில் அக்சய் குமார் கதாபாத்திரம் போன்று பறவைகளுக்காக போராடிய "பறவை மனிதர்"

'2 பாய்ன்ட் ஓ' திரைப்படத்தில் அக்சய் குமார் கதாபாத்திரம் போன்று, பறவைகளுக்காக போராடிய சமூக ஆர்வலரை, இந்த தொகுப்பில், தெரிந்து கொள்வோம்...
2 பாய்ன்ட் ஓ திரைப்படத்தில் அக்சய் குமார் கதாபாத்திரம் போன்று பறவைகளுக்காக போராடிய பறவை மனிதர்
x
'2 பாய்ன்ட் ஓ' திரைப்படத்தில், அக்‌சய் குமார், பறவையியல் ஆராய்ச்சியாளராக வருகிறார். இந்தியாவின் புகழ்பெற்ற பறவையியல் ஆய்வாளரான சலீம் அலியின் தாக்கத்திலேயே 'பக்சிராஜன்' கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாம்... யார் இந்த சலீம் அலி?

சலீம் அலி, இந்தியாவின் 'பேர்ட்மேன்' என்று அறியப்பட்டவர். இந்தியாவில் பறவையியல் ஆய்வையும் பிரபலமாக்கியவர். இவர், மும்பையில் பிறந்தவர். இளம் வயதில், ஒரு சிட்டுக் குருவியை சுட்டுவிட்டார். இறந்து விழுந்த குருவியை அவரால் மறக்கவே முடிய வில்லை. இவரது மனம் பறவைகளைச் சுற்றியே சிறகடித்தது. புதுப்புது பறவை மாதிரிகள், இறகுகளை சேகரித்தார். விலங்கியல் படித்தவர், தேசிய வரலாற்றுக் கழக அருங்காட்சியகத்தில் 'கைடு' வேலையில் சேர்ந்தார். பிறகு, அந்த வேலையை விட்டுவிட்டார்.

பறவையியலில் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஜெர்மனி சென்று, பயிற்சி பெற்று நாடு திரும்பினார். தூக்கணாங்குருவியின் வாழ்க்கை முறை பற்றி 1930-ல் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டு புகழ் பெற்றார். 1932-ல் 'கேரளப் பறவைகள்' என்ற நூலை எழுதி வெளியிட்டார். பறவையியல் தொடர்பான பத்திரிகை ஒன்றையும் நடத்தினார்.

தேசியளவில், பறவைகள் சரணாலயம் அமைப்பதில் இவரது பங்கு முக்கியமானது. பறவைகளின் நண்பனாக, பாதுகாவலராக விளங்கியதோடு, இயற்கை பாதுகாப்பிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.பறவைகளின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கங்கள், இனப்பெருக்கம், வலசைபோதல் குறித்து ஏராளமான கட்டுரைகள், நூல்கள் எழுதியுள்ளார். 'இந்திய, பாகிஸ்தான் பறவைகளின் கையேடு', சுயசரிதை நூலான 'சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' ஆகியன, உலகப் புகழ் பெற்றவை.

நாடு முழுவதும் சுற்றி, பறவைகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார். இவரது 'இந்தியப் பறவைகள் பற்றிய கையேடு' என்ற புத்தகம், மொத்தம் 13 முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் முதன்முதலில் பறவைகளைப் பற்றிய முழுமையான தகவல்களை திரட்டத் தொடங்கியது இவர்தான். பத்மபூஷண், பத்மவிபூஷண் மட்டுமின்றி, பல நாடுகளில் இருந்தும் பல்வேறு விருதுகள், சிறப்பு பட்டங்கள், பரிசுகள் பெற்றுள்ளார்.

பறவைகளைப் பற்றி அறிந்துகொள்வதை பொழுதுபோக்காக இல்லாமல், வாழ்க்கைப் பணியாகவே மேற்கொண்டிருந்தார். மக்கள் இவரை 'பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக் களஞ்சியம்' என்றே அழைத்தனர். பறவை ஆராய்ச்சி, இயற்கைப் பாதுகாப்பு ஆகிய பணிகளில் சுமார் 65 ஆண்டுகாலம் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட சலீம் அலி 92-வது வயதில் காலமானார்.


Next Story

மேலும் செய்திகள்