சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலையின் சிறப்புகள்...

நர்மதை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள, சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலையின் சிறப்புகளை விவரிக்கிறது.
சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலையின் சிறப்புகள்...
x
* உலகிலேயே மிக அதிகமாக 182 மீட்டர் உயரத்தில் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது,   அமெரிக்காவில் உள்ள சுதந்திரா தேவி சிலையை விட இரண்டு மடங்கு அதிகம்.

* இதுவரை, சீனாவின் 153 மீட்டர் உயர புத்தர் சிலையே உலகின் உயரமான சிலையாக இருந்து வந்தது. நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கு அருகே 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பிலான செயற்கை ஏரியின் நடுவே 2979 கோடி ரூபாய் செலவில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

* சிலை அமைந்துள்ள சாது பெட் தீவுக்கு செல்ல மூன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. படகிலும் 5 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து தீவை அடையலாம்.

* சிலையின் கட்டுமான பணிகள் தொடங்கி 33 மாதங்களில் நிறைவடைந்துள்ளது. நொய்டாவை சேர்ந்த 93 வயதான ராம் சுதர் என்ற சிற்பி வடிவமைத்த சிலையை, முப்பரிமாணத்தில் பெரிதாக்கி அந்த மாதிரியை கொண்டு சிலை அமைக்கப்பட்டது. 

* படேல் சிலையை வடிவமைக்க வலுப்படுத்தப்பட்ட இரும்பு 18 ஆயிரம் டன் மற்றும் கட்டுமான இரும்பு 6 ஆயிரம் டன் என 24 ஆயிரம் டன் இரும்பு பயன்படுத்தப்பட்டது. 

* பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரத்தை கட்ட 7300 டன் இரும்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தவிர, 3550 டன் எடையிலான வெண்கல தகடுகளை கொண்டு சிலை போர்த்தப்பட்டுள்ளது. 

* 250 பொறியாளர்களும் 3400 தொழிலாளர்களும் இணைந்து பணியாற்றி இந்த உலக சாதனை சிலையை வடிவமைத்துள்ளனர். 180 கிலோ மீட்டர் வேகத்தில் கடுமையான புயல் காற்று வீசினாலும் இந்த சிலை தாங்கும். 

* இதுபோல, 6.5 ரிக்டர் அளவிலான நில அதிர்வையும் தாங்கக் கூடியது. நர்மதை ஆற்றில் 100 ஆண்டு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது

* 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட சராசரி மனிதனை போல 100 மடங்கு உயரம் கொண்டது, இந்த சிலை. பிரமாண்டமான இந்த சிலையை நிறுத்துவதற்காக, கால் பகுதிகளில் மட்டும் 500 டன் எடையிலான பிடிமானங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

* சிலையின் உள்பகுதிக்குள் பார்வையாளர்கள் செல்லும் விதமாக லிப்ட் வசதி உள்ளது.  சிலையின் முழங்கால் வரையிலான பகுதியில் அருங்காட்சியகம், 3டி கண்காட்சி அரங்கம், 250 கூடாரங்களுடன் கூடிய கூடார நகரம், மலர் பூங்கா போன்றவை உள்ளன. 

* இதுபோல, சிலையின் மார்பு பகுதியில், 153 மீட்டர் உயரத்தில் பார்வையாளர் மாடம்  அமைக்கப்பட்டுள்ளது.  அங்கிருந்தபடி, நர்மதா அணை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை பார்த்து ரசிக்க முடியும். ஒரே நேரத்தில் 200 பேர், அந்த மாடத்தில் இருக்கலாம்.

* 'ஒற்றுமைக்கான சிலை' என்ற பெயருக்கு ஏற்ப, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் சொந்த விருந்தினர் விடுதிகளும் இங்கு அமைகின்றன. இந்தியா சுதந்திரம் பெற்றபோது சிதறிக் கிடந்த ஏராளமான சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து முழுமையான இந்தியாவை உருவாக்கியதால், 'இரும்பு மனிதர்' என போற்றப்படுபவர், சர்தார் வல்லபாய் படேல். 

* அவருக்காக, குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட சிலை, உலக அளவிலான சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என்பது நிச்சயம்..


Next Story

மேலும் செய்திகள்