நேபாளத்தில் சிக்கியிருந்த தமிழக பக்தர்கள் 16 பேர் சென்னை வருகை

நேபாளத்தில் மோசமான வானிலையால் சிக்கி தவித்தவர்களில் தமிழகத்தை சேர்ந்த 19 பேர் மீட்கப்பட்டனர்.அவர்களில் 16 பேர் விமானம் மூலம் நேற்றிரவு சென்னை வந்தனர்.
நேபாளத்தில் சிக்கியிருந்த தமிழக பக்தர்கள் 16 பேர் சென்னை வருகை
x
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 23 பேர் கடந்த ஜுன் 20ந் தேதி  நேபாள நாட்டில் உள்ள கைலாஷ்,மானசரோவருக்கு யாத்திரை சென்றனர். அங்கு கடும் மழை, குளிர்,  நிலச்சரிவு ஏற்பட்டு வழக்கத்திற்கு மாறாக மோசமான வானிலை நிலவியது. விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் நேபாளம் சென்ற ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவித்தனர். அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்க மத்திய அரசு வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொண்டது. இதேபோல் தமிழக அரசும் 2 அதிகாரிகளை நேபாளத்திற்கு அனுப்பியது.

தமிழகத்தை சேர்ந்த 23 பேரில் 4 பேர் கடந்த 30ந் தேதி சென்னை திரும்பி விட்ட நிலையில்  மற்ற 19 பேர் நேபாள அரசு உதவியுடன் சிறிய ரக விமானம் மூலம் சீன எல்லை அருகே உள்ள பட்லா கோட் பகுதியில் மீட்கப்பட்டனர்.  அனைவரும் விமானம் மூலம் லக்னோ அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 3 பேர் டெல்லி சென்ற நிலையில், 7 பெண்கள் உள்ளிட்ட 16 பேர் விமானம் மூலம் நேற்றிரவு சென்னை வந்தனர். 


இதனிடையே நேபாளத்தில் உயிரிழந்த ஆண்டிப்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமச்சந்திரனின் உடல் விமானம் மூலம் இன்று சென்னை கொண்டு வரப்பட்டு பின்னர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.



சிமிகோட்டில் மேலும் 4 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

நேபாளத்தில் சிக்கியிருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியை சேர்ந்த அருணாசலம், மனோகரன் மற்றும் இவர்களது மனைவிகள் என 4 பேர் மீட்கப்பட்டு, இந்திய தூதரகத்தில் பாதுகாப்பாக இருப்பதாக, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்கள் பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"ஏனைய இந்தியர்கள் இன்று  மீட்பு" - வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

மானசரோவர் புனித பயணத்தில் சிக்கி தவித்த 319 இந்தியர்கள் சிமிகோட் பகுதியில் இருந்து மீட்கப்பட்டு உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 5 நேபாள விமானங்கள் மற்றும் 3 நேபாள ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மட்டும் 118 பேர் மீட்கப்பட்டனர். ஹில்சா என்ற பகுதியில் இருந்து 200 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இவ்வாறு மீட்கப்பட்ட இந்தியர்கள் அனைவரும்  நேபாளின் கன்ஞ் பகுதிக்கு பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர். மீட்கப் படவேண்டிய ஏனைய இந்தியர்கள் இன்றைக்குள் மீட்கப்படுவார்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்