நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட அரசுப் பள்ளி - மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி

ஸ்மார்ட் வகுப்பறைகள், வீட்டுப் பாடங்களை மின்னஞ்சலில் அனுப்புதல் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி அசத்துகிறது ஒரு அரசுப் பள்ளி.
நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட அரசுப் பள்ளி - மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி
x
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாங்குடி கிராமத்தில் உள்ள இந்த பள்ளி 1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1973 ல் நடுநிலைப் பள்ளியானது. இப்பள்ளி வளாகத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மரங்களால் பள்ளி வளாகமே பசுமைச் சோலையாக காட்சியளிக்கிறது. இங்கு மொத்தம் 10 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இணையதள வசதியுடன் கணினிவழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு வகுப்பறையில் சுமார் 25 மாணவர்கள் அமரக்கூடிய வகையில் சுழலும் இருக்கைகள் காணப்படுகின்றன. தன்னார்வலர்களின் நிதியை தமிழக அரசின் தன்னிறைவு திட்டத்தின் கீழ் பயன்படுத்தி 1, 2-ம் வகுப்புகளைத் தவிர, மற்ற வகுப்பறைகளில் ஏசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வகுப்பறைகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன. அங்கு டிஜிட்டல் டிவி வசதியும் உள்ளது. 8 வகுப்பறைகள் உட்பட 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பயோ - மெட்ரிக் முறையில் வருகைப் பதிவு, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட் வசதி என ஒவ்வொரு அம்சத்திலும் அசத்துகிறது இந்த அரசுப் பள்ளி. நவீன தொழில்நுட்ப வசதிகள் அனைத்தையும் சாத்தியமாக்கியிருக்கும் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்வித் திறனினும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குகின்றனர்.

ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் பாடம் நடத்தப்படுவதால், பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்கின்றனர். புத்தகம் கட்டாயமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. கொடுக்கப்படும் வீட்டுப் பாடத்தைக்கூட நோட்டுகளில் எழுதிக் கொண்டுவரத் தேவையில்லை. மாறாக, வீட்டில் எழுதியதை போட்டோ எடுத்து மின்னஞ்சலுக்கு அனுப்பினால் போதும். அதற்கான வசதிகள் இல்லாதவர்களுக்காக பள்ளி யில் டேப்லெட் வசதி கொடுக்கப்படுகிறது.

வகுப்பறைகளில் சாக்பீஸ் பயன்பாடு இல்லை என்பதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தூசியால் தொல்லை ஏற்படுவதில்லை. பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிராமப்புற மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகளை எளிதில் புரிந்துகொண்டு புலமை பெற்றுவிடுகின்றனர். இத்தனை வசதிகளையும் பெற்று, அதிநவீன பள்ளியாக திகழ்வதால் மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி நடக்கிறது. இதைவிட ஒரு அரசுப்பள்ளிக்கு வேறேன்ன பெருமை இருக்க முடியும்.


Next Story

மேலும் செய்திகள்