நெருக்கடி நிலை அமலானது பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு

இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத பதிவாக மாறிப்போன நெருக்கடி நிலை அமலானது பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு...
நெருக்கடி நிலை அமலானது பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு
x
இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத பதிவாக மாறிப்போன நெருக்கடி நிலை அமலானது பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு...

இந்திய பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது, 1971ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரும் முறைகேடு நடந்ததாக பிரபல காந்தியவாதியான ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினார்கள்

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து அவருக்கு எதிராக போட்டியிட்ட சுதந்திர போராட்ட தியாகியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜ் நாராயண் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில் 1975ம் ஆண்டு தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், இந்திரா காந்தியின் வெற்றி செல்லாது என உத்தரவிட்டதோடு தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டதால் இந்திராகாந்தியை குற்றவாளி என அறிவித்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் அறிவித்தது. 

இந்த தீர்ப்பை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியதால், இந்திரா எடுத்த முடிவு தான் நெருக்கடி நிலை. இந்திராவின் பரிந்துரையின் பேரில் அப்போதைய குடியரசு தலைவர் பக்ருதின் அலி, நெருக்கடி நிலை பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.

அப்போது முடிவுற்றிருந்த பாகிஸ்தான் போர், வறட்சி மற்றும் பெட்ரோல், டீசல் நெருக்கடி போன்ற காரணங்களை சுட்டிக் காட்டி, 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி அன்று நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 

1977ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி வரை சுமார் 21 மாத காலம் அமலில் இருந்த நெருக்கடி நிலை காலத்தை இந்தியாவின் இருண்ட காலம் என்றே எதிர்க்கட்சிகள் வருணித்தன.

நெருக்கடி நிலை அமலுக்கு வந்ததுமே 'முதல் நபராக' இந்திராவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ராஜ் நாராயண் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து இந்தியா முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்கள் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டனர்.

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த மாநில அரசுகள் கலைக்கப்பட்டதோடு, பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் அனைத்தும் பறிக்கப்பட்டன. பத்திரிகைகள் கூட தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. 

கட்டாய கருத்தடை தொடங்கி குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்காமலேயே கைது செய்வது வரை நடந்த கெடுபிடிகளையும் சிறைச்சாலை சித்திரவதைகளையும் 'மிசா' கொடுமை என எதிர்க்கட்சிகள் வருணித்தன. ஆனால், 'ஜனநாயகத்தின் பேரிரைச்சல்' நிறுத்தப்பட்டதாக இந்திரா காந்தி கூறினார். 

ஜெயப்பிரகாஷ் நாராயன், மொரார்ஜி தேசாய், வாஜ்பாய், அத்வானி, ஜார்ஜ் பெர்ணாண்டஸ் மற்றும் இடது சாரி தலைவர்கள் என நாடு முழுவதும் முக்கியமான எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக கைது செய்யப்பட்டனர். 

இந்திரா காந்தி மற்றும் அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி இருவரின் அதிகாரத்தால் எதிர்க்கட்சியினர் கடும் அதிருப்தியில் இருந்த நிலையில், வினோபா பாவே, எழுத்தாளர் குஷ்வந்த் சிங் போன்ற சிலர், ராணுவ ரீதியிலான கட்டுப்பாடான வாழ்க்கை முறை எனக் கூறி நெருக்கடி நிலையை வரவேற்றனர். 

1977ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி அன்று பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 1977ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற அந்த தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெறும் 153 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 

அதில், 92 இடங்கள் தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய 4 தென் மாநிலங்களில் பெற்ற இடங்களாகும். அதாவது, எமர்ஜென்சிக்கு பிறகும் காங்கிரசை தென் மாநிலங்கள் கைவிடவில்லை. ஆனால், உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி தோல்வியடைந்தார். 

ஜனதா கட்சி 298 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து ஜனதா கூட்டணி 345 இடங்களை கைப்பற்றியது. 

தேர்தல் முடிவுகள் வெளியானதும் நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்பட்டது. 21 மாத நெருக்கடி நிலைக்கு பிறகு, 1977ம் ஆண்டு மார்ச் 24ம் தேதியன்று மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றது. இந்தியாவில் மீண்டும் ஜனநாயகம் மலர்ந்தது. 

Next Story

மேலும் செய்திகள்