ஆசிரியரை பிரிய மனமில்லாமல் மாணவர்களும், பெற்றோர்களும் சேர்ந்து நடத்திய பாசப் போராட்டம்

திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளியில், பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை, பிரிய மனமில்லாமல் மாணவர்களும், பெற்றோர்களும் சேர்ந்து நடத்திய பாசப் போராட்டம், காண்போரை நெகிழ வைத்தது..
ஆசிரியரை பிரிய மனமில்லாமல் மாணவர்களும், பெற்றோர்களும் சேர்ந்து நடத்திய பாசப் போராட்டம்
x
ஆசிரியரை பிரிய மனமில்லாமல் கதறி அழுத மாணவர்கள்...



திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெள்ளியரகத்தில் செயல்பட்டுவரும் அரசு உயர்நிலைப்பள்ளியில், பகவான், சுகுணா ஆகியோர் ஆங்கில ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்தனர். இருவரும் மாணவர்களிடம் மிகுந்த அன்பு செலுத்தியதுடன், பாடத்தை இனிமையாகவும், எளிமையாகவும் நடத்தி வந்துள்ளனர். குறிப்பாக ஆசிரியர் பகவான், மாணவர்களிடம் நண்பராகவே பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டை காட்டிலும், இந்தாண்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில், திடீரென ஆசிரியர்கள் பகவான் மற்றும் சுகுணா ஆகியோர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த மாணவர்கள், அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்கள் பெற்றோரை அழைத்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கு பூட்டு போட்டு, பதாகைளுடன் மாணவர்கள் போராட்டம் நடத்த, பெற்றோர்களும், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டால், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப போவதில்லை என கூறியுள்ளனர். 



இந்நிலையில்தான், பள்ளியில் இருந்து Reliving order பெற வந்துள்ளார் ஆசிரியர் பகவான்...... அவரை கண்டவுடன்  சூழ்ந்துகொண்ட மாணவர்கள், அவரை பள்ளியை விட்டு செல்ல விடாது கதறி அழுதனர். மாணவர்களின் அன்பை கண்டு வாயடைத்துபோய் நின்ற பகவான், அவர்களை சமாதானப்படுத்த முடியாமல் திகைத்தார். இதனை கண்ட சக ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அங்கிருந்த அனைவரது கண்களும் குளமாகின...

மாணவர்களின் போராட்டம் குறித்து விளக்கம் கேட்டுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பகவானின் இடமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இரண்டு நாட்களாக ஸ்தம்பித்து இருந்த பள்ளி, இந்த அறிவிப்பிற்கு பின்னரே மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. 

அப்படி என்னதான் செய்துவிட்டார் இந்த ஆசிரியர் பகவான்..? இந்த கேள்வியை மாணவர்கள் மத்தியில் கேட்டால், பதில்களை அடுக்கி கொண்டே செல்லும் மாணவர்கள், ஆசிரியர் எந்த பள்ளிக்கு செல்கிறாரோ, அங்கே தாங்களும் போய் விடுவோம் என்கின்றனர்....

மாணவர்களின் பாசத்தை கண்டு, வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியடைந்தாலும், தற்போது பாசத்திற்கு கட்டுப்படுவதா... அல்லது அரசாணைக்கு கட்டுப்படுவதா என்ற குழப்பத்தில் இருக்கிறார் ஆசிரியர் பகவான்...



மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுத்து துன்புறுத்தும் ஆசிரியர்கள்... ஆசிரியர்களை பயங்கர ஆயுதங்களால் தாக்கும் மாணவர்கள் ...என செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில், ஆசிரியர் மீது அதீத அன்பு செலுத்தும் வெள்ளியகரம் பள்ளி மாணவர்களும், மாணவர்களை நண்பர்களாக பாவிக்கும் பகவான் போன்ற ஆசிரியர்களும் சற்றே புதுமையாக தெரிகின்றனர்...




Next Story

மேலும் செய்திகள்