"சந்தேகப் பார்வையால் துளைத்தெடுத்த கணவர்" - மனம் நொந்து உயிரை மாய்த்துக் கொண்ட சித்ரா

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு, கணவர் ஹேம்நாத்தின் சந்தேகப் பார்வையே காரணம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சந்தேகப் பார்வையால் துளைத்தெடுத்த கணவர் - மனம் நொந்து உயிரை மாய்த்துக் கொண்ட சித்ரா
x
தொகுப்பாளராக அறிமுகமாகி, சின்னத்திரை நடிகையாக மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்த சித்ராவின் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், தொடக்கத்தில் இருந்தே, சித்ராவின் காதல் கணவர் ஹேம்நாத் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 

ஆறு நாட்கள் போலீசாரின் விசாரணையில் ஆஜரான ஹேம்நாத்தின் நடவடிக்கை மற்றும் முன்னுக்குப் பின் முரணாக அவரளித்த பதில்களும், அவர்மீதான சந்தேகத்தை வலுப்படுத்தியதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சித்ராவும், ஹேம்நாத்தும் காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்து கொண்ட நிலையில், ஹேம்நாத்தின் குடிப்பழக்கம் மற்றும் சந்தேகப் பார்வையால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு நீடித்துள்ளது. 

அனைவரிடமும் சகஜமாக பழகும் சித்ராவிடம், எந்த நடிகருடன் நெருக்கமாக இருந்தாய் என்பது தனக்குத் தெரியும் என்றும், 
தெரியாத மற்ற விஷயங்களை மறைக்காமல் சொல்லுமாறும் கணவர் ஹேம்நாத், சித்ராவை அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  இது மட்டுமின்றி, படப்பிடிப்புத் தளத்திற்கு திடீரென சென்று தகராறு செய்வதையும் ஹேம்நாத் வாடிக்கையாகக் கொண்டிருந்ததும் அம்பலமாகியுள்ளது.

இந்த நிலையில் தான், சித்ரா நடித்து வந்த டிவி தொடரில், சக நடிகருடன் நெருக்கமான காட்சிகள் படமாக்கப்பட்டன. அன்றிரவு, சித்ரா காரில் ஹோட்டலுக்கு  சென்றபோது, இதை முன்வைத்து ஹேம்நாத் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.   

அறைக்கு வந்த பின்னும் வாக்குவாதம் நீடித்த நிலையில், நீ இல்லாமல் வாழ முடியாது என சித்ரா கதறியழ, அவரை திட்டிவிட்டு ஹேம்நாத், ஹோட்டல் அறையில் இருந்து கோபமாக வெளியேறியதாக கூறப்படுகிறது. இதன்பிறகே, தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவை சித்ரா எடுத்திருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

ஹேம்நாத்தின் பெற்றோரும், ஹேம்நாத்தும் ஆர்.டி.ஓ விசாரணையில், இன்று  ஆஜராக இருந்த நிலையில், ஹேம்நாத்தை போலீசார் நேற்றிரவு அதிரடியாக கைது செய்தனர். ஹேம்நாத் தற்போது பொன்னேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தும் தேதி அறிவித்த பிறகு, பொன்னேரி சிறையில் இருந்து விசாரணைக்கு ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
 
பணிச்சுமையும், தாயைப் பிரிந்த மன வலியும் வாட்டி வதைத்த வேளையில், நம்பி வந்த காதல் கணவரும் சந்தேக வார்த்தைகளால் அனுதினமும் துளைத்தெடுத்ததை தாங்கிக் கொள்ள முடியாமலே, சித்ரா தன் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.




Next Story

மேலும் செய்திகள்