நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்க உத்தரவு

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
x
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினரும், இயக்குனர் பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமி அணியினரும் தனித்தனியாக நாடக நடிகர்களை சந்தித்து தங்களுக்கு ஆதரவு திரட்டி வந்தனர். 

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதாக இருந்த சென்னை ஜானகி -எம்.ஜி.ஆர் கல்லூரியில் அதே நாளில் எஸ்.வி. சேகரின் நாடகம் நடைபெறுவதாக போஸ்டர்கள் வெளியாகின. அந்த இடத்தை முன்பதிவு செய்ததற்கான ரசீதை எஸ் வி. சேகர் வெளியிட்டதால் திட்டமிட்டபடி அன்று நடிகர் சங்க தேர்தல் நடைபெறுமா? என்று கேள்வி எழுந்தது. 

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலுக்கு போலீசார் அளிக்க பாதுகாப்பு கோரி நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நடிகர் சங்க தேர்தலை நியாயமாக நடத்த உதவுமாறு கோரி விஷால் உள்ளிட்டோர் ஆளுனர் பன்வாரிலால் புரோகித்தை சென்னை ஆளுனர் மாளிகையில் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இதனிடையே, நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்குமாறு மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். நடிகர் சங்கத்தை சேர்ந்த பாரதி பிரியன் மற்றும் 61 உறுப்பினர்களின் புகார் மனுக்களை பெற்று விசாரணை நடத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் வாக்களிக்க தகுதி உள்ள உறுப்பினர்களின் பட்டியல் இறுதி செய்ய வேண்டி உள்ளதாகவும், இந்த சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தலை நடத்துவது ஏற்புடையதாக இல்லை என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கருணாஸ் கண்டனம் - பாக்யராஜ் அதிர்ச்சி 

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளதற்கு பாண்டவர் அணியை சேர்ந்த நடிகர் கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு அதிர்ச்சி அளிப்பதாக சங்கரதாஸ் சுவாமி அணியை சேர்ந்த இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு கோரி விஷால் தொடர்ந்த வழக்கு : விசாரணையை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம் 

நடிகர் சங்க தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கோரி விஷால் தாக்கல் செய்த மனு மீது தற்போதைக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.


"தமிழக அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது" - பூச்சி முருகன்

நடிகர் சங்கத் தேர்தலை சங்கங்களின் பதிவாளர் நிறுத்துவதாக அறிவிப்பது விதிமீறல் என்று விஷால் அணியை சேர்ந்த நடிகர் பூச்சி முருகன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சங்கங்களின் பதிவாளரிடம் பட்டியல் பெற்ற பின்னரே உறுப்பினர் பட்டியல் தயார் செய்யப்பட்டது என்றும், தேர்தலை நிறுத்தியதற்கு பின்னால் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் கூறினார். 

"போதிய கால அவகாசம் தேவை" -  நடிகர் ஜெயமணி  

நடிகர் சங்க தேர்தலுக்கு போதிய கால அவகாசம் வேண்டும் என நடிகர் ஜெயமணி தெரிவித்துள்ளார்.Next Story

மேலும் செய்திகள்