இளையராஜாவின் இசைக்கு, குரல் கொடுக்க மேடை ஏறுகிறார் எஸ்.பி.பி.

ராயல்டி பிரச்சினையால், ஓராண்டுக்கும் மேலாக பேசாமல் இருந்து வந்த இளையராஜாவும், எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் இணைந்து ஒரே மேடையில் தோன்ற உள்ளது இசை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இளையராஜாவின் இசைக்கு, குரல் கொடுக்க மேடை ஏறுகிறார் எஸ்.பி.பி.
x
* இசையமைப்பாளர் இளையராஜாவும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியும் இணைந்து காலத்தால் அழியா காவியப் பாடல்களை கொடுத்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த பல பாடல்கள் இசை ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்திருக்கின்றன.

* இந்தநிலையில், எஸ்.பி.பி-50 என்ற தலைப்பில், அவரது மகன் எஸ்.பி.பி.சரண் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தார். அதையொட்டி, அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் பாலசுப்பிரமணியன் பங்கேற்று பாடினார். அப்போது, இளையராஜா தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை எப்படி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மேடையில் பாடலாம் என்றும், முன் அனுமதி பெறாமல் தனது பாடல்களை இசைத்தாலோ, அல்லது மேடைகளில் பாடினாலே அது காப்புரிமை மீறலாகும் என்றும் கூறப்பட்டிருந்தது.

* இதுகுறித்து கருத்து தெரிவித்த எஸ்.பி.பி., என்ன நடக்குமோ நடக்கட்டும் என்றார். பின்னர் மற்றொரு தருணத்தில் பேசிய எஸ்.பி.பி., இளையராஜாவின் மீது தான் வைத்திருக்கும் மரியாதை துளியளவும் குறையவில்லை என்று கூறியிருந்தார்.

* பாடல்களின் காப்புரிமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இருவருக்கும் பிரச்சினை வெடித்ததால், இளையராஜாவின் எந்தவொரு இசை நிகழ்ச்சியிலும் எஸ்.பி.பி கலந்துகொள்ளவில்லை. அண்மையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இளையராஜா 75 என்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சியிலும் எஸ்.பி.பி. பங்கேற்க வில்லை. ராயல்டி பிரச்சினையால் பேசாமல் இருந்து வந்த இந்த இரண்டு இசைக்கலைஞர்களும், தற்போது, ஒரே மேடையில் இணைய உள்ளனர்.

* ஆம், இளையராஜாவின் பிறந்த நாளான ஜுன் 2ந் தேதி, சென்னை பூந்தமல்லி அருகே பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், எஸ்.பி.பி, யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உட்பட பல முன்னணி பாடகர்கள் பங்கேற்று பாட உள்ளனர். ராயல்டி பிரச்சினையால் ஏற்பட்டு இருந்த மனக்கசப்புகள் நீங்கி, ஒரே மேடையில் இருவரும் தோன்ற உள்ளது இசை ரசிகர்களுக்கு, இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Next Story

மேலும் செய்திகள்