எப்படி இருக்கிறது சர்கார்..?

சர்கார் என்ற பெயருக்கேற்றவாறு அரசியல், நாட்டு நடப்புகளை படத்தில் காட்சிகளாக இயக்குநர் முருகதாஸ் வைத்திருக்கிறார்.
எப்படி இருக்கிறது சர்கார்..?
x
தேர்தலில் ஒவ்வொரு குடிமகனும் அவர்களுடைய  ஓட்டை சரியான முறையில் தவறாமல் போடுவதன் மூலம் நாட்டில் நல்ல சர்கார் அமையும் என்கிறது விஜய்யின் இந்த சர்கார்.

பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் உயரதிகாரியான   சுந்தர் ராமசாமி  (விஜய்), செல்லும் இடமெல்லாம் தன் புத்திசாலித்தனத்தால் கம்பெனிகளை வளைத்துப் போடுகிறார். இதனால் பெரிய பெரிய கார்ப்பரேட் முதலாளிகள் இவரைப் பார்த்து பயந்து ஓடுகின்றனர். அதனாலே சுந்தரை  ''கார்ப்பரேட் மான்ஸ்டர்''  என அழைப்பதுண்டு. இந்நிலையில் தன்னுடைய ஓட்டை போட தமிழகம் வருகிறார் சுந்தர். வந்த இடத்தில், அவரது ஓட்டு கள்ள ஓட்டாகப் போடப்பட்டிருப்பது கண்டு, பொங்கி எழும் விஜய் கோர்ட்டுக்குப் போகிறார். கோர்ட்டில்  சுந்தருக்கு சாதகமாக தீர்ப்பு வர, ஆட்சி அமைக்க முடியாமல் ஜெயித்த கட்சி தலைவர் பழ.கருப்பையா, அவரது மகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் கட்சியின் நம்பர்-2 ராதாரவியும் தவிக்கின்றனர். இதனால் அவர்களின் எதிர்ப்பிற்கு ஆளாகிறார் சுந்தர். இந்த எதிர்ப்பை சமாளித்து, "நம்ம சர்க்கார்" என்ற வசனத்துக்கு ஏற்றார்போல் சுந்தர் (விஜய்) செய்யும் அரசியல் விளையாட்டு தான் கதை.

“கேள்வி கேட்டால் தான் பதில் கிடைக்கும், நான் கேள்வி கேட்கிறேன்?” என தைரியமாக தமிழ்நாட்டில் உள்ள சமகால பிரச்சனைகளை பேசியுள்ள விஜய்யும், படத்தின் திரைக்கதையும் தான் சர்கார் படத்தின் மிகப்பெரிய பிளஸ். டயலாக், டான்ஸ், வசனம் என எல்லா ஏரியாவிலும் விஜய் வழக்கம்போல புகுந்து விளையாடி இருக்கிறார். 



பழ.கருப்பையா, ராதாரவி, வரலட்சுமி மூவரும் தங்களது கதாபாத்திரத்தை எந்தக் குறையுமின்றி சிறப்பாக செய்துள்ளனர்.  பழ.கருப்பையாவின் மகளாக வரும் வரலக்ஷ்மி வார்த்தையிலேயே மிரட்டுகிறார். கீர்த்தி சுரேஷ் எதற்கு இருக்கிறார் என்று தெரியாத அளவுக்கு ஒரு கதாபாத்திரம். ஒரு சில காட்சிகளில் வரும் யோகிபாபுவும் பெரிதாக ஜொலிக்கவில்லை.



ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் சிம்டாங்காரன், ஒரு விரல் புரட்சி இரண்டும் மீண்டும் கேட்கத்தோன்றுகிறது. பின்னணி இசை காட்சிக்கு காட்சி ஹார்ட் பீட்டை எகிற வைக்கிறது. பிரம்மாண்டம், சண்டைக்காட்சிகள் என அனைத்திற்கும் தேவையான ஒளிப்பதிவினை கிரிஷ் கங்காதரன் சிறப்பாக அளித்திருக்கிறார். சர்காரின் நீளம் ஸ்ரீகர் பிரசாத்தின் சிசர்கள் இன்னும் சிறப்பாக வெட்டியிருக்கலாமோ என நினைக்க வைக்கிறது. ராம்-லட்சுமணனின் கோரியோகிராஃபியில் சண்டைக்காட்சி புதுவிதமாகவும், சிறப்பாகவும் இருக்கிறது.



சர்கார் என்ற பெயருக்கேற்றவாறு அரசியல், நாட்டு நடப்புகளை படத்தில் காட்சிகளாக இயக்குநர் முருகதாஸ் வைத்திருக்கிறார். அதைப்போல, நடப்பு அரசியலோடு படத்தை வெகுவாக கனெக்ட் செய்வதில் வெற்றி பெறுகிறார் இயக்குநர். பல இடங்களில் நம்மை யோசிக்க வைத்துள்ளார். பல வசனங்கள் கைத்தட்டல் பெற்றிருக்கிறது. தனது முந்தைய படங்களில் இருந்து வேறுபட்டு, படத்தின் தொடக்கத்திலேயே கதைக்குள் இறங்கியிருக்கிறார் முருகதாஸ். இதனாலேயே படம் தொய்வு இல்லாமல் விறுவிறுப்பாக நகர்கிறது. நிச்சயம் முருகதாஸ் - விஜய் கூட்டணிக்கு இப்படம் ஹாட்ரிக் வெற்றியைத் தரும்.

Next Story

மேலும் செய்திகள்