எப்படி இருக்கிறது வட சென்னை..?

கேரம் போர்டு விளையாட்டில் சாதிக்க நினைக்கும் அன்பு (தனுஷ்) வாழ்கையில், ரவுடியிசமும், அரசியலும் கலந்து எப்படி திசை மாற்றுகிறது என்பது தான் கதை.
எப்படி இருக்கிறது வட சென்னை..?
x
கேரம் போர்டு விளையாட்டில் சாதிக்க நினைக்கும் அன்பு (தனுஷ்) வாழ்கையில், ரவுடியிசமும், அரசியலும் கலந்து எப்படி திசை மாற்றுகிறது என்பது தான் கதை. ஊருக்கு நல்லது செய்யும் நாயகன் கமல் வகை தாதாவாக ராஜன்(அமீர்) . அவரின் இரு கரங்களாக இருக்கும் குணா (சமுத்திரகனி) , செந்தில் (கிஷோர்) . ராஜனின் சொந்த தம்பி வேலு ( டேனியல் பாலாஜி)  இப்படி நிறைய கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் எல்லாமே மனதில் நங்கூரமாக பதியும் வண்ணம் வடிவமைத்துள்ளார் வெற்றிமாறன். தனுஷின் காதலியாக வரும் ஐஷ்வர்யா ராஜேஷ் கெட்ட வார்த்தையில் பேசும்போது தியேட்டரில் விசில் பறக்கிறது...மிகவும் துணிச்சலான கதாப்பாத்திரம். படம் முழுக்க ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் வருவது எதார்த்ததுக்கு வலு சேர்க்கிறது. ஆனால் குடும்பமாக செல்பவர்களை முகம் சுளிக்க வைக்கலாம். 



சீட் நுனியில் அமர வைக்கும் இடைவேளை காட்சியில் கைதட்டல் அடங்க சில நிமிடங்கள் ஆகிறது. இடைவேளை வரை சாதுவாக இருக்கும் தனுஷ் 2வது பாதியில் வெளுத்து வாங்குகிறார். காதல், கோபம், பயம், படபடப்பு என எல்லா ஏரியாவிலும் ஸ்கோர் செய்கிறார். சென்னை தமிழிலும் பட்டைய கிளப்பியுள்ளார். படத்தில் அரசியல் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. போப் ஆண்டவர் அடுத்த வருடம் வருகிறார் என்பதற்காக குடிசைப் பகுதிகளை காலி செய்யச் சொல்லும் இடமாகட்டும், ராஜீவ் காந்தி இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டு ஊரில் பதற்றம் நிலவும் போது அதை சாக்காக வைத்துக் கொண்டு கடைகளை சூறையாடும் காட்சிகள், எம்ஜிஆர் இறந்துவிட்டார் என்ற செய்தி மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம் என பல முக்கிய நிகழ்வுகள்  காட்சியாகியுள்ளது. "இவங்க எல்லாம் சொல்றாங்க ஜானகி அம்மா வருவாங்க, நெடுஞ்செழியன் வருவாருன்னு.. ஆனால் நான் சொல்கிறேன் ஜெயலலிதா தான் வருவாங்க..." என்று அமீர் வசனம் பேசுகிறார். 



அதேபோல் சாலையை அகலமாக்குகிறோம் என்று கூறி குப்பத்தை காலி செய்யச் சொல்கிறார்கள்... அப்போது சாலைக்கு மறுபுறத்தில் வீடுகள் கட்டி கொடுக்கிறோம், அனைவருக்கும் அரசாங்க வேலை கொடுக்கிறோம் என்று அரசு அதிகாரிகள் வாக்குறுதி அளிக்கிறார்கள். இதை கேட்கும் மக்கள், கடலுக்கு அருகில் வீடுகள் அமைத்து இருப்பதன் காரணத்தையும் அந்த இடத்தை விட்டு விட்டு தள்ளிச் சென்றால் தாங்கள் சந்திக்கப் போகும் பிரச்சனைகளையும் சொல்கிறார்கள். "தெரிந்த வேலையை செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டு தெரியாத வேலையை கொடுக்கிறோம் என்று சொல்வது எப்படி நியாயம்"...
 "திரும்பி வரும்போது ஊரு இருக்கும் அப்படிங்கற நம்பிக்கைலை தான் வெளியூருக்கு வேலைக்குப் போகிறோம்.. திரும்பி வந்தா ஊரே இருக்காதுன்னு சொன்னா எப்படி?” இப்படி பல வசனங்கள். ஒரு கட்டத்தில் மக்கள் பேசுவது புரியாமல் அதிகாரிகள் விழிக்கும்போது..."எங்கள் பாஷையே உங்களுக்கு புரியவில்லை எங்கள் வாழ்க்கை எப்படி புரியும்" என்று தனுஷ் கேட்கும்போது கைதட்டல்கள் பறக்கிறது. 



சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மிகப்பெரிய பலம். King of seas என்ற பாடலை பயன்படுத்தியிருக்கும் விதம் புல்லரிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் முழுமையாக இடம் தராமல் சில வரிகள் மட்டுமே வருவது, ஆங்காங்கே வரும் மாஸ் காட்சிகள் , ட்விஸ்ட்கள் எல்லாம் இரண்டு மணி நேரம் 46 நிமிடங்கள் என்ற நீளத்தை உணரவிடாமல் வேகமாக கடக்க வைக்கிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவு மிகவும் அழகாக உள்ளது. நிறைய ஆட்கள் இருந்தாலும் கண்களை உறுத்தாமல் களத்தில் நாமே நிற்பது போன்ற உணர்வைத் தருகிறது. 



படத்தின் குறை என்று சொல்ல வேண்டுமானால், காட்சிகளை முன்னும் பின்னுமாக காட்டி கதை சொல்லியிருக்கும் விதம் ஒரு சிலருக்கு புரியாமல் போகலாம்.. அதேபோல் சென்னை வட்டார வழக்கு ஒரு சில வசனங்களில் புரியாமல் இருக்கலாம். ஒட்டுமொத்தமாக படத்தை பார்த்துவிட்டு, வடசென்னையின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று எதிர்பார்க்க வைத்திருப்பது இயக்குனரின் வெற்றி. நிச்சயமாக பல விருதுகளை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் என்று நினைக்க வைக்கிறது இந்த வட சென்னை.

Next Story

மேலும் செய்திகள்