புதிய படங்களை திருடும் தியேட்டர்களை கண்டுபிடித்த தயாரிப்பாளர்கள்

புதிய படங்களை சில தியேட்டர் உரிமையாளர்களே திருட்டுத்தனமாக பதிவு செய்து ஆன்லைனில் வெளியிடும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய படங்களை திருடும் தியேட்டர்களை கண்டுபிடித்த தயாரிப்பாளர்கள்
x
திருட்டு விசிடி... தமிழ் சினிமாவின் மிகப்பெரும் தலைவலி.

தொழில்நுட்பம் வளர, வளர அதனை பயன்படுத்தி திருடும் நுட்பமும் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது.ஒரு படம் வெளியான அன்றே அந்த படம் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாவது வாடிக்கையாகி விட்டது. தியேட்டருக்கு வரும் முன்பே, ஆன்லைனில் படம் வெளியான சம்பவங்களும் சில நடந்திருக்கின்றன. 

இப்படித் தான், கடந்த மே மாதம் 25ஆம் தேதி திரைக்கு வந்த 'ஒரு குப்பையின் கதை' படம் வெளியான அன்றே இணையதளத்தில் வெளியாகி தயாரிப்பாளர் அஸ்லாமுக்கு அதிர்ச்சி அளித்தது. பொதுவாக ஒரு படத்தின் உரிமையை வெளிநாட்டிற்கோ, வெளிமாநிலங்களுக்கோ கொடுக்கும் போது, அதன் மூலம் திருட்டத்தனமாக இணையதளங்களில் பதிவேற்றம் செய்வது வழக்கம். 

ஆனால், வெளிநாட்டிற்கோ, வெளிமாநிலத்திற்கோ உரிமம் வழங்காத நிலையில், படம் திருட்டுத்தனமாக வெளியானது, படக்குழுவுக்கு பேரிடியாக விழுந்தது. இதனையடுத்து படத்தை தியேட்டர்களுக்கு கொண்டு செல்லும் தொழில்நுட்ப நிறுவனத்தை தயாரிப்பாளர் அஸ்லாம் அணுகினார். அந்த நிறுவனம் அளித்த தடயவியல் அறிக்கையின்படி, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள கோமதி திரையரங்கில் திருட்டுத்தனமாக படம் பதிவு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

உடனடியாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அறிவுசார் சொத்து பிரிவில் தயாரிப்பாளர் அஸ்லாம் புகார் கொடுத்தார். இதனையடுத்து திரையரங்கு உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் திரையரங்கின் உரிமையாளர் மட்டும் ஜாமீனில் வெளியே உள்ளார். கோமதி திரையரங்கினுள் கள்ளத்தனமாக பதிவு செய்ய பயன்படுத்திய புரொஜக்டர் உள்பட 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி ஆர்.கே.செல்வமணி தலைமையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்சி தொழிலாளர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தனர். அதில், தமிழகம் முழுவதும் திருட்டுத்தனமாக படங்களை பதிவு செய்யும் திரையரங்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, கரூர், ஆரணி, விருத்தாசலம் மற்றும் மங்களூர் உள்ளிட்ட நகரங்களில் எந்தெந்த படங்கள், எந்தெந்த திரையரங்குகளில் பதிவு செய்யப் பட்டன என்ற விபரத்தையும் அவர்கள் அளித்துள்ளனர். பெரும் பொருட்செலவிலும், உழைப்பிலும் உருவாகும் ஒரு படத்தை திருட்டுத்தனமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு தமிழகத்தில் உள்ள சில திரையரங்கு உரிமையாளர்களே துணை போவது திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்