🔴LIVE : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப திருவிழா | நேரலை காட்சிகள்

x

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தை மாத தெப்ப திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியாக தெப்ப திருவிழா இன்று நடைபெறுகிறது.

அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருள தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காட்சியளிக்கிறார்.




மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், பச்சைக் குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று வைரத்தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக தெப்பத் திருவிழா இன்று நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு காலை 7.30 மணியளவில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர். சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிம்மாசனத்தில் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் எழுந்தருளினார்.

அங்கு அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்த தெப்பத்தேரில்(மிதவை) தெய்வானையுடன், சுப்பிரமணியசுவாமி அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதையடுத்து காலை 11 மணியளவில் இங்கு கூடியிருந்த பக்தர்கள் தெப்பத்தேரில் இணைக்கப்பட்டிருந்த வடத்தை பிடித்து இழுத்து தெப்பக்குளத்தின் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி 3 முறை வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

இதேபோல இரவில் மின் ஒளியில் வெப்பத்தில் எழுந்தருளும் சுப்பிரமணிய சுவாமி தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குவார்.

இதனைத் தொடர்ந்து வான வேடிக்கைகளும் இசை கச்சேரிகளும் நடைபெறும்.

பின்னர் மேளதாளங்கள் முழங்க தங்கக் குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன்பு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெறும்.


Next Story

மேலும் செய்திகள்