பணிச்சுமை காரணமாக இளைஞர் தற்கொலை-உறவினர்கள் போராட்டம்
ஸ்ரீபெரும்புதூரில் பணிச்சுமை காரணமாக இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் மாம்பாக்கம் சிப்காட்டில் உள்ள தனியார் கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நிறுவனத்தில் உணவு இடைவேளை கூட வழங்காமல், தொடர்ந்து பணி கொடுப்பதாகவும், தட்டி கேட்டால் உயர் அதிகாரிகள் மாரியப்பன், ஐயப்பன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கடிதம் எழுதி வைத்து விட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்தின் உறவினர்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
