Hosur | ரியல் எஸ்டேட் அதிபர் கொடூர கொ*ல... காரணமாக நண்பனே இருந்த பேரதிர்ச்சி
தொழில் போட்டியில் ரியல் எஸ்டேட் அதிபரை அவரது நண்பரே கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பணப் பிரச்சனை மற்றும் தொழில் போட்டி காரணமாக ரியல் எஸ்டேட் அதிபரைக் கூலிப்படை ஏவிக் கொலை செய்த அவரது நண்பர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குந்துமாரணப்பள்ளியைச் சேர்ந்த குரு பிரசாத் என்பவர் கடந்த 7ம்தேதி , அவரது வீட்டில் வைத்து மர்ம கும்பலால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குருபிரசாத்திடம் 5 லட்சம் கடன் வாங்கிய அவரது நண்பர் சுரேஷ்பாபு, பணத்தைத் திருப்பித் தருவதில் ஏற்பட்ட தகராறில் குரு பிரசாத் தன்னை கொலை செய்து விடுவார் என பயந்தும், தொழில் போட்டி காரணமாகவும் கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலமானது. இதனிடையே சுரேஷ் பாபுவிற்கு நெருக்கமான ஒரு பெண்ணுடன் குரு பிரசாத் பழகி வந்ததாகவும், இதுவும் இந்த கொலை சம்பவத்திற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் பதுங்கியிருந்த சுரேஷ்பாபு மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த வெங்கடேஷ், தேவராஜ், நவீன் ஆகியோரையும் சேலத்தில் வைத்து கைது செய்த போலீசார், மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
