"கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் நகைக்கடையில் மீட்பு" - போலீசார் அதிரடி நடவடிக்கை

கோவில்பட்டி அருகே கொள்ளையடிக்கப்பட்ட நகையை, நெல்லையில் உள்ள நகைகடையில் பறிமுதல் செய்த காவல்துறை, உரிமையாளர் உள்பட இரண்டு பேரை அழைத்து சென்றனர். இதனை கண்டித்து வியாபாரிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனையில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் வீட்டில், கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி, 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் ஈடுட்ட குற்றவாளிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திருடிய நகைகள் நெல்லை டவுணில் உள்ள நகை கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கடைக்கு டெம்போவில் சென்ற தூத்துக்குடி காவல்துறையினர் 5 பேர், பாட்சா என்பவருக்கு சொந்தமான ரஹ்மத் ஜீவல்லரியில், திருடபட்ட நகைகளை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் பாட்சா, ஊழியர் புஷ்பா என இருவரையும் அழைத்து சென்றுள்ளனர்.

இதனை கேள்விபட்ட வியாபாரிகள் டவுண் மேல ரதவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். நகைகளை திருப்பி தர கோரி அவர்கள் வலியுறுத்தினர். அவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. எனினும், இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com