

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை நடத்த ஆன செலவை, அந்த தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமாரிடமிருந்து வசூலிக்க கோரிய வழக்கினை, வரும் 31-ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை ஒத்திவைத்துள்ளது. மதுரையை சேர்ந்த தமிழரசன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு, நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பில் இருக்கும் வேட்பாளர், வேறொரு தேர்தலில் போட்டியிடுவதை முறைப்படுத்த கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அது தொடர்பான தரவுகளையும், இதே போல் தாக்கல் செய்து தள்ளுபடியான வழக்கின் உத்தரவையும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை அக்டோபர் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.