Trichy | வனப்பகுதியில் அடுத்தடுத்து வெடித்து சிதறிய லாஞ்சர் குண்டுகள் | திருச்சியில் பெரும் பரபரப்பு
Trichy | வனப்பகுதியில் அடுத்தடுத்து வெடித்து சிதறிய லாஞ்சர் குண்டுகள் | திருச்சியில் பெரும் பரபரப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வீரமலை வனப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் படை வீரர்கள் வழக்கமான ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அவ்வாறு பயிற்சி மேற்கொள்ளப்படும் போது, சிறிய அளவிலான சில லாஞ்சர் குண்டுகள் வெடிக்காமல் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் விழுந்துவிடுகின்றன. இந்நிலையில், வனப்பகுதியில் கால்நடை மேய்ச்சலில் ஈடுபடும் பொதுமக்கள், ஆங்காங்கே வெடிக்காமல் கிடக்கும் லாஞ்சர் குண்டுகளை அடையாளம் கண்டு வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து வந்தனர். அதனடிப்படையில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவ்வப்போது கைப்பற்றப்பட்ட லாஞ்சர் குண்டுகளைப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தனர். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பில் இருந்த குண்டுகளைச் செயலிழக்கச் செய்து அழிப்பதற்காகச் சென்னையிலிருந்து சிறப்பு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில், வீரமலை வனப்பகுதிக்கு உட்பட்ட 'பீரங்கி மேடு' என்ற இடத்தில் சுமார் 10 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது. அதில், சிறிய அளவிலான 2 லாஞ்சர் குண்டுகள் உட்பட கைப்பற்றப்பட்ட மொத்தம் 16 குண்டுகள் பாதுகாப்பாகப் புதைக்கப்பட்டு, வெடிவைத்து தகர்க்கப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியபோதிலும், அதிகாரிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக இப் பணியைச் செய்து முடித்தனர்.
#trichy #launcher #army #thanthitv
