தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக கனமழை

தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக கனமழை பெய்தது.
தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக கனமழை
Published on

சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. கிண்டி, ஆலந்தூர், அடையார், திருவான்மியூர், தரமணி உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது. புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழை

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கனமழை காரணமாக ஒருசில இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை

ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 2 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. கொல்லம் பாளையம், சோலார், லக்காபுரம், சின்னியம் பாளையம், மொடக்குறிச்சி, கரூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

முதுமலையில் கனமழை - மாயார் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

நீலகிரி மாவட்டம் முதுமலையில் பெய்த கனமழையால், மாயார் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. முதுமலை, அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, நடுவட்டம், ஊட்டி, லவ்டேல், தொட்டபெட்டா மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அடர்த்தியான மேக மூட்டத்துடன் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழையால், மாயார் ஆற்றில், நீர் கரைபுரண்டு ஓடியது.

பலத்த காற்றுடன் கனமழை - தணிந்த வெப்பம் - மக்கள் மகிழ்ச்சி

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. காலை முதல் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், மாலை வேளையில், தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவில் கனமழை பெய்தது. வந்தவாசி சுற்றியுள்ள அம்மையப்பட்டு, சென்னாவரம், சேதுராகுப்பம் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியதால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

நாகையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், வாஞ்சூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் இதமான சூழல் நிலவியது. மேலும் கடைமடை பகுதிகளில் பெய்த மழையால், குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழை

வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. நேற்று காலை முதல் கடும் வெப்பம் காணப்பட்ட நிலையில், மாலையில் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

* இதேபோல், ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், இந்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவியது.

* நாமக்கல் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. கடந்த 2 நாட்காளாக லேசான தூரல் மழை பெய்து வந்த நிலையில், பல இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக மின் இனைப்பு துண்டிக்கப்பட்டது.

* கும்பகோணம் பகுதியில் வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாலையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com