கொட்டிய மழை... குறட்டைவிட்டு தூங்கிய திருடன்... கோவையில் ஒரு Funny திருடன்
கோவையில் கோயில் உண்டியல் பணத்தை திருடிய கொள்ளையன், மதுபோதையில் தூங்கிய ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோவை புதூர் அருகே அமைந்துள்ள பால விநாயகர் கோயிலில், வழக்கம்போல் காலையில் கோயிலை திறக்க குருக்கள் சென்றபோது கதவுகள் திறக்கப்பட்டு, உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததுடன், ஒருவர் மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள், கொள்ளையனை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் போலீஸ் நடத்திய விசாரணையில், காரைக்கால் நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த சின்னையன் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ளதும், கோவைபுதூருக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கட்டிட வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.
புதூர் பால விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து 8 ஆயிரத்து 250 ரூபாயை திருடிய சின்னையன், கோவில் கருவறை கதவை இரும்பு கம்பி மூலம் உடைத்து அங்கிருந்த பொருட்களையும் திருடியுள்ளார். அப்போது மழை பெய்ய தொடங்கியதால் மழை நின்றதும் கோயிலை விட்டு செல்லலாம் என்று நினைத்து, உண்டியல் அருகில் படுத்து தூங்கியுள்ளார்.
இது குறித்து கோயில் நிர்வாகி வெங்கடேஷ் கொடுத்த புகாரின் பேரில் சின்னையனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திரைப்பட பாணியில் நடந்த இச்சம்பவம் கோவை புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
