நள்ளிரவில் பைக்ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 15 பேர் மீது வழக்குப்பதிவு...
இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்கள் அதி வேகமாக ஓட்டுவது, பைக்ரேஸில் ஈடுபடுவது, பின்னிருக்கையில் பெண்களை உட்கார வைத்து வீலிங் போன்ற சாகசத்தில் ஈடுபட்டு, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக செயல்படுவது அதிகரித்துள்ளது. நேற்று இரவு மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேஸ் ஈடுபடுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மட்டும் பைக் ரேஸில் ஈடுபட்டதாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களது இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனிடையே நேற்று இரவும், இன்று அதிகாலையும் ஏற்பட்ட வெவ்வேறு விபத்தில் சீனிவாசன், சந்தோஷ்குமார் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விபத்துகள் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போக்குவரத்து போலீசார், பைக் ரேஸ் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளவதாக இறந்தவரின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
