ராணுவ வீரரைக் கொன்று கிணற்றில் வீசிய பயங்கரம்...மனைவி, மாமியார் உட்பட 7 பேர் அதிரடி கைது

x

ராணுவ வீரர் மது போதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டதாக நினைத்த உறவினர்கள் அனைவரையும் அதிர வைத்திருக்கிறது, அவரின் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்..

உயிரிழந்த பிறகே உடலை கிணற்றில் போட்டிருப்பதாக உடற்கூறாய்வு அறிக்கை உறுதிப்படுத்த காவல்துறையினரின் விசாரணை வேகமெடுத்தது.

கொலை செய்யப்பட்டவர் ராஜேஷ். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ட்ட தேன்மலைபட்டி கிராமத்தை சேர்ந்தவர். இந்தியன் ஆர்மியில் வேலை பார்த்து வந்த ராஜேஷ் ஆறு வருடங்களுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர்களின் காதலுக்கு சாட்சியாக தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு மனைவியோடு தனிக்குடித்தனம் சென்ற ராஜேஷ் கண்ணமங்கலம் பகுதியில் குடியேறி உள்ளார். ஆறு மாதங்கள் ராணுவத்தில் வேலை செய்யும் ராஜேஷுக்கு ஒரு மாத விடுமுறை கிடைக்குமென சொல்லப்படுகிறது.

ஒருபுறம் கணவர் குடும்பத்தை பிரிந்து எல்லையில் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த போது, ராஜேஷின் மனைவி சங்கீதாவும் வேலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி பிள்ளைகளுக்காக சேர்த்து வைத்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் எல்லாம் பிள்ளைகளுக்காக தான் என நினைத்து இருவரும் வாழ ஆரம்பிக்க அவர்களுக்குள் இருந்த காதல் மறைந்து பொறுப்புணர்வு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தான், கடந்த சில மாதங்களாகவே ராஜேஷ், அவருடைய மனைவி சங்கீதாவிடம் செவிலியர் வேலையைவிட்டுவிட்டு பிள்ளைகளை கவனித்து கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்.

ஆனால், சங்கீதா அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் காதல் மனைவிக்கு, அவர் பணிபுரியும் இடத்தில் வேறு யாருடனோ தொடர்பு இருப்பதாக ராஜேஷ் சந்தேகித்துள்ளார். இதன்காரணமாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப சண்டை நடந்து வந்திருக்கிறது.

இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு ராஜேஷ் விடுமுறையில் கண்ணமங்கலத்திற்கு திரும்பி உள்ளார். அவர் வந்த நாள் முதலே கணவன் மனைவிக்கிடையே தினமும் தகராறு நடந்துள்ளது.

ஒருக்கட்டத்தில் இதற்குமேல் கணவருடன் வாழ முடியாதென முடிவெடுத்த சங்கீதா பிள்ளைகளை கூட்டிக்கொண்டு அவருடைய தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

பிள்ளைகளை காணாமல் தவித்த ராஜேஷ் சென்ற மே 13 ம் தேதி மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியிடம் சமாதானம் பேசி இருக்கிறார். ஆனால், சங்கீதா கணவருடன் செல்ல மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி இருக்கிறது.

தலைக்கேறிய மது போதையிலிருந்த ராஜேஷ் பெற்ற தாய் கண்முன்பாகவே அவரின் மகளை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளார். இதனை தடுக்க முற்பட்ட சங்கீதாவின் தாய் சாந்திக்கும் சரமாரியான அடி விழுந்திருக்கிறது.

பெண்களில் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த சங்கீதாவின் அண்ணன் சதீஷ் ராஜேஷ் தாயையும் சகோதரியையும் மிருகத்தனமாக அடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

சதீஷும் ஆர்மியில் வேலை பார்த்து வந்த காரணத்தால் ராஜேஷுக்கு பதிலுக்கு பதில் அடி கொடுத்துள்ளார். அதோடு விட்டுவிடாமல் கூட்டாளிகளை வரவழைத்து ராஜேஷை வேறொரு தோட்டத்திற்கு கடத்தி சென்று அங்கு வைத்து விடிய விடிய அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.

ஒருக்கட்டத்தில் வலிதாங்க முடியாமல் மயங்கிய ராஜேஷ் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொலை செய்த பிறகு டெட்பாடியை மறைக்க திட்டம் போட்ட சதீஷும் அவருடைய கூட்டாளிகளும்,அதே பகுதியிலிருந்த கிணற்றில் வீசிவிட்டு தலைமறைவாகி உள்ளது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

நடந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஏற்கனவே சங்கீதாவின் தந்தை ஏழுமலை, சதீஷின் நண்பர்களாக கதிரவன், ஜெயக்குமார், கிஷோர் மற்றும் கலையரசன் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர்

மேலும் நடந்த கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த சதீஷ் அவருடைய தாய் இந்திரா, மற்றும் சகோதரி சங்கீதாவை வலைவீசி தேடி வந்தனர், இந்த சூழலில் தான் சங்கீதாவும், இந்திராவும் ஆரணி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சதீஸ் கொலை செய்த பிறகு மீண்டும் ஆர்மிக்கு சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. அதன்காரணமாக அவரையும் கைது செய்யும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

கணவன் மனைவி சண்டையில் தலையிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன், மகள் மற்றும் நான்கு இளைஞர்கள் கொலையாளிகளாக மாறி இருப்பது ஆரணியை அதிர வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்