CM Vijay Meets PM Modi | ``கூடாது'’ - முதல்முறையாக PM மோடியை சந்தித்ததும் CM விஜய் கேட்டது

``கூடாது'’ - முதல்முறையாக PM மோடியை சந்தித்ததும் CM விஜய் கேட்டது

பிரதமரை முதன்முறையாக சந்தித்த முதல்வர் விஜய் பிரதமர் மோடியை முதலமைச்சர் விஜய் சந்தித்தது கவனம் பெற்றுள்ள நிலையில், அவர் முன்வைத்த கோரிக்கைகள் என்னென்ன? - பார்க்கலாம் விரிவாக... தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் முதன்முறையாகத் டெல்லிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லி சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் விஜய்க்கு, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து முறைப்படி சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, தமிழ்நாடு இல்ல வளாகத்தில் காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட கௌரவ அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது தமிழக நலன் சார்ந்த 4 முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அவர் அளித்தார். குறிப்பாக, அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப் பாடலைப் பாடுவதற்கு மத்திய அரசு உரிய தெளிவுரையை வழங்க வேண்டும். வான்வழி அமைப்பு மையத்தை (CABS) தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்.. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்தை அனுமதிக்கக் கூடாது மற்றும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் இடம்பெற்றுள்ளன. தவெக ஆட்சி அமைந்த பிறகு முதலமைச்சர் விஜய் மேற்கொண்டுள்ள இந்த முதல் டெல்லி பயணம், அரசியல் மற்றும் அரசு நிர்வாக ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com