மத்திய பட்ஜெட்.. அரசியல் தலைவர்களின் பரபரப்பு ரியாக்சன் | Budget 2025 | BJP | Nirmala Sitharaman

x

மத்திய பட்ஜெட் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். உலகளாவிய நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், நமது பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஒரு முன்னுதாரண மாற்றம் தேவைப்பட்டது எனவும் ஆனால் இந்த அரசாங்கம், அந்த யோசனைகளில் திவாலானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், புல்லட் காயங்களுக்கு ஒரு பேண்ட் எய்ட் எனவும் மத்திய பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறவில்லையே என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்கல்வி தரவரிசை, நிதி ஆயோக் அறிக்கை என மத்திய அரசின் அனைத்து அறிக்கைகளிலும் தமிழ்நாட்டின் செயல்பாடுகளுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்பட்டு, நிதிநிலை அறிக்கையில் மட்டும் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எங்களின் கோரிக்கைகளில் ஒன்றைக்கூடவா அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை? என்றும், மத்திய பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டை பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள் ஏதும் இல்லை என்றும், வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மாயாஜால அறிக்கையாக உள்ளது என்றும் அதிமுக பொதுச்செயலளார் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய வளத்தை பெருக்க உதவும் நதி நீர் இணைப்பு திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்றும், ரயில்வே திட்டங்கள், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வருமான வரி விலக்கு மற்றும் சுங்க வரியில் மாற்றங்கள் செய்திருப்பது வரவற்புக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள பதிவில், நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க ஒரு சில அம்சங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய பெட்ரோல், டீசல், GST வரிக் குறைப்பு மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிப்பது குறித்து, எந்த ஓர் அறிவிப்பும் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், வழக்கம் போல் இந்த ஆண்டும் தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும், போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மாறாக, பாரபட்சத்தோடு நடந்துகொள்வது சரியான அணுகுமுறை இல்லை என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பட்ஜெட்டில், ரயில், நீர் பாசன திட்டங்கள் மற்றும் வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வருமான வரி வரம்பு உயர்வு, மருந்துகள் மீதான வரி குறைப்பு, மருத்துவப் படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அவர் வரவேற்பதாக குறிப்பிட்டார். அதேநேரம், பள்ளிக்கல்விக்கு 78 ஆயிரம் கோடியும், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு 86 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்கீடு செய்தது போதுமானது அல்ல என அவர் சுட்டிக்காட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்