Wayanad Landslide|சுனாமி போல எழுந்த `நில பிரளயம்’ - உள்ளே இழுத்து சென்ற பூமி..உயிர்களை குடித்த கோரம்
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்திருக்கிறது... கேரள மாநிலம் வயநாடு அருகே கள்ளாடியில், சுரங்கப்பாதை கட்டுமானம் நடந்து வந்த பகுதியில் தான், இந்த பயங்கர நிலச்சரிவு சம்பவம் நடந்தது. சுனாமி அலை போல வாரிச்சுருட்ட பாய்ந்து வரும் மண் குவியலிடம் இருந்து, உயிரை காத்துக்கொள்ள மக்கள் ஓடிவரும் காட்சி, காண்போரை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களை இணைக்கும் அனக்கம்போயில் - மேப்பாடி சுரங்கப்பாதை திட்டப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தபகுதியில் பெய்து வரும் கனமழையால், குவித்து வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மண் குன்று சரிந்து தற்காலிக தொழிலாளர் குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள் மீது விழுந்தது. சுரங்கம் தோண்டும்போது எடுக்கப்பட்ட மண்ணை அகற்றும்படி அதிகாரிகள் கொடுத்த எச்சரிக்கையை ஒப்பந்ததாரர்கள் புறக்கணித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என கேரள முதல்வர் வி.டி. சதீசன் குற்றம்சாட்டி உள்ளார். இதனால் இது 'மனித தவறுகளால் நேர்ந்த விபத்து' என மாநில அரசு சாடியுள்ளது. தற்போது தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத் துறை மற்றும் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்க, டிடெக்டர்கள் கொண்டு தேடும் பணி நடந்தது. மோப்ப நாய்களும் கொண்டு வரப்பட்டு தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டது. வயநாட்டில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், தொடரும் மழைக்கு மத்தியிலும் மீட்புப்பணி நடந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று வயநாட்டில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நிலச்சரிவு ஏற்படுவதற்கு, வெறும் 15 நிமிடங்களுக்கு முன், கார் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சி வெளியாகி உள்ளது... 2024ல் வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட கோரத்தின் காயம் ஆறும் முன்னே, மீண்டும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது, கேரள மக்களை நிலைகுலைய செய்திருக்கிறது.
