

கடந்த வருடம் பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய திரைப்படம் Article15.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் Article15இன் படி சக இந்தியர்களை மத, இன, சாதி, பாலின, மற்றும் பிறப்பிட அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது.
Article15 திரைப்படத்தின் கதைப்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சிறு கிராமத்தில் இரண்டு பட்டியலின சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழக்க, மூன்றாவதாக இன்னொரு சிறுமியும் மாயமாகிறார்.
இந்த வழக்கு குறித்து அந்த ஊருக்கு புதிதாக வரும் ஐபிஎஸ் அதிகாரியான கதாநாயகன் துப்பு துலங்குகிறார்.
விசாரணையின் போக்கில், அக்கிராமத்தில் பட்டியலின மக்கள் நடத்தப்படும் விதம், மற்றும் அவர்களுக்கெதிரான தீண்டாமைக் கொடுமைகள் உள்ளிட்டவை கண்டு அதிர்ச்சி அடையும் நாயகன், சிறுமிகளின் மரணத்திற்கும், அவர்களது சாதிக்கும் உள்ள இணைப்பை அறிவது போல் கதை நகரும்...
நாயகனோடு சேர்த்து படம் பார்த்த கள எதார்த்தம் அறியாத நகரவாசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது இந்த திரைப்படம்.
அதேபோன்ற அதிர்ச்சியைதான் ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. சம்பவம் நடந்த ஹத்ராஸ் மாவட்டம், பூள்கர்ஹி கிராமத்தில் சாதிய பாகுபாடும், தீண்டாமையும் இன்றும் மிக தீவிரமாக பின்பற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்தீப் தாக்கூரின் குடும்பத்தினரே, 20 வருடங்களுக்கு முன்பு, உயிரிழந்த இளம்பெண்ணின் தாத்தாவை சாதிய வன்கொடுமைக்கு ஆளாக்கி யிருக்கிறார்கள்.
இறந்த இளம்பெண்ணையும், கடந்த 6 மாதங்களாகவே பின்தொடர்ந்தும், தொல்லைகொடுத்தும், தகாத வார்த்தைகளை பேசியும், துன்புறுத்தி இருக்கிறான், சந்தீப்.
பட்டியலினத்தை சேர்ந்த 15 குடும்பங்கள் மட்டுமே தற்போது உள்ள நிலையில், அவர்களும் தங்கள் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து இந்த கிராமத்தை விட்டு அனுப்பி விட வேண்டும் என்பதுதான் இம்மக்களின் கனவாக இருக்கிறது.
அங்கு நடக்கும் கொடுமைகள் இம்மரணத்தால் வெளி வந்துள்ளதால், தன் குடும்பத்திற்கு ஆபத்து வருமோ என அந்த இளம்பெண்ணின் தந்தை அஞ்ச, தன் மகளுக்கு நியாயம் கிடைத்தே தீரவேண்டும் என்ற அந்த தாயின் அழுகுரல் இந்தியாவின் மனசாட்சியாக ஒலிக்குமா?