பாக்., விமானங்களை அடிக்க போகும் முதல் ஏவுகணை? அலறவிடும் IGLA-S
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையிலான முறுக்கல் அதிகரித்து வருகிறது. இந்திய கடற்படையும், விமானப்படையும் அடுத்தடுத்து பயிற்சியை மேற்கொண்டிருக்கிறது. இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதன் தொடர்ச்சியாக விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங்கை பிரதமர் மோடி தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பு தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவும் நிலையில் கடற்படை தளபதி, விமானப்படை தளபதி ஆகியோரை பிரதமர் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தியது முக்கியம் பெற்றுள்ளது. இதற்கிடையே ரஷ்யாவிடம் இருந்து இக்லா-எஸ் ஏவுகணைகளை இந்தியா வாங்கியிருக்கிறது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கியிருக்கும் இந்த இக்லா-எஸ் ஏவுகணை, குறுகிய வான் பாதுகாப்பு கட்டமைப்பாகும். அதாவது இந்திய எல்லைக்குள் வான் வழியாக வரும் எதிரி நாட்டு விமானங்கள், ட்ரோன்களை அழிக்க வல்லது. இக்லா-எஸ் ஏவுகணை சிஸ்டம் வீரர்கள் தோளில் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அதாவது இக்கட்டான, கரடு முரடான நிலப்பரப்பு கொண்ட முக்கியமான இடங்களிலும் இக்லா-எஸ் ஏவுகணைகளை எடுத்துச் செல்ல முடியும்.
எல்லைக்குள் வரும் எதிரிநாட்டு போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை தகர்க்க வல்லது. அதுபோக எதிரியின் கப்பல் ஏவுகணைகள், ட்ரோன்களையும் கண்டறிந்து அழிக்கும். 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரியின் இலக்கையும், 3 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள இலக்கையும் குறிபார்த்து தகர்க்கும். 5 நொடிகளில் இக்லா-எஸ் பாதுகாப்பு கட்டமைப்பால் எதிரி இலக்கை தகர்க்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
அவசரகால கொள்முதல் அதிகாரங்களின் கீழ் இப்போது இந்தியா 250 கோடி ரூபாய்க்கு இக்லா-எஸ் ஏவுகணைகளை வாங்கியிருக்கிறது. இந்த பாதுகாப்பு சிஸ்டம் பாகிஸ்தானை குறிவைத்து மேற்கு எல்லையில் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியாவின் முன்னணி ஆயுத சப்ளையராக இருக்கும் ரஷ்யாவிடமிருந்து சக்திவாய்ந்த விமான எதிர்ப்பு ஏவுகணை கட்டமைப்பை இந்தியா வாங்கியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. இக்லா-எஸ் ஏவுகணைகள் சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் இந்திய பாதுகப்பு படைகளின் கரத்தை மேலும் வலுவாக்கும் என்று பாதுகாப்பு வல்லுநர்களால் தெரிவிக்கப்படுகிறது.
