Cheers அடிக்கும்போது செய்த தவறு.. மூச்சு நிற்கும் வரை ரசித்த நண்பன்

x

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவின்மூடு பகுதியில் உள்ள ஒரு குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், குளத்தில் மிதந்து கொண்டிருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒருவேளை கொலையாக இருக்கலாமோ? என சந்தேகித்த போலீசார், உயிரிழந்தவர் குறித்து விசாரித்தபோது, அவர் கல்லம்பலம் பகுதியை சேர்ந்த ராஜு என தெரியவந்தது.

விசாரணையில் சேகரித்த தகவலின் அடிப்படையில், உயிரிழந்த ராஜுவின் நண்பர்களான சுனில் உட்பட 4 பேரை கைது செய்து போலீசார் தங்களது பாணியில் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், 4 நண்பர்களில் ஒருவரான சுனில், ராஜுவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட நிலையில், அவர் அளித்த வாக்குமூலம்தான் போலீசாரை ஒரு நொடி மிரள வைத்தது.

ராஜு, சுனில் உட்பட நண்பர்கள் மது அருந்துவதற்காக மாவின்மூடு பகுதியில் உள்ள குளத்தின் அருகே ஒன்று கூடியுள்ளனர்.

மதுவை ஊற்றி குடிப்பதற்கு முன், மதுப்பிரியர்கள், மது ஊற்றப்பட்ட கண்ணாடி கிளாஸை இடித்தபடி Cheers என Chorous ஆக சொல்வது இயல்பான ஒன்றுதான்... அந்த விதத்தில் நண்பர்களுக்குள் Cheers சொல்லும்போது, சுனிலுக்காக ஊற்றி வைக்கப்பட்ட மதுவை, ராஜு தட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த சுனில் ராஜுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அது கைகலப்பில் முடிந்ததாக சொல்லப்படுகிறது.

அதன் பிறகு நண்பர்கள் ஒன்றாக மது அருந்திய நிலையில், சுனிலுக்கோ, ராஜு மீதான கோபம் தீரவில்லை என கூறப்படுகிறது.

சில மணி நேரங்களுக்குப் பிறகு, மதுபோதையில் இருந்த ராஜு, அங்கிருந்த குளத்தில் குளித்துள்ளார். அப்போது, ராஜு தனியாக இருப்பதைக் கண்ட சுனில், தானும் குளத்தில் இறங்கி அவரிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சுனில், ராஜுவை குளத்தில் மூழ்கடித்ததுடன், அவர் இறந்ததை உறுதி செய்த பின்னரே குளத்தில் இருந்து வெளியேறியதாக போலீசார் நடத்திய விசாரணையில் கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த விசாரணையை தொடர்ந்து, சுனிலை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்