Breaking: திரைப்பட போஸ்டர் ஒட்ட ரசிகர் மன்றத்தினரிடம் லஞ்சம் கேட்டு தாக்கிய போலீசார் |

x

திரைப்பட போஸ்டர் ஒட்ட லஞ்சம் தர மறுத்த கார்த்தி ரசிகர் மன்றத்தினரை தாக்கிய தூத்துக்குடி போலீசார் மூவருக்கு தலா 2 லட்சம் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் கார்த்தி நடித்த தோழா படம் வெளியான போது, தூத்துக்குடி கார்த்தி ரசிகர் மன்ற தலைவரான வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள் வெங்கடகொடி, சீனிவாஸ் ஆகியோரிடம், தூத்துக்குடி மத்திய காவல் நிலைய தலைமை காவலர் திரவியரத்தினராஜ், லஞ்சம் கேட்டுள்ளார்.

அதற்கு மறுத்த மூவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று, அங்கு, காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் தலைமைக் காவலர் திரவிய ரத்தினராஜ் ஆகியோர் ஆபாசமாக திட்டியதுடன், கடுமையாக தாக்கியுள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷின் சகோதரர் வழக்கறிஞர் கவாஸ்கர், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களில் இருந்து மூன்று போலீசாரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, பாதிக்கப்பட்ட வெங்கடகொடிக்கு 5 லட்சம் ரூபாயும், சீனிவாஸ் மற்றும் வெங்கடேஷுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்த தொகையை மூன்று போலீசாரிடமும் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் பிடித்தம் செய்ய உத்தரவிட்ட ஆணையம், போலீசாருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கையும், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்