தமிழக விஜிலென்ஸ் வைத்த செக்மேட்.. குடும்பத்தோடு சிக்கலில் மாஜி அமைச்சர்? - பெட்டி பெட்டியாக இறங்கிய டாக்குமெண்ட்ஸ்..!

x

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதியப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மீது சுமார் 810 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத்துறையினர் தாக்கல் செய்துள்ளனர். இது குறித்து விரிவாக அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

கடந்த அதிமுக ஆட்சி காலகட்டத்தில் 2015 முதல் 2021 ஆண்டுகள் வரை உணவு மற்றும் நுகர் பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ்...

தற்போது, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினராக உள்ள காமராஜ், அமைச்சராக இருந்த போது தனது மகன்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கடந்த 2021 ஆம் ஆண்டு திரூவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது...

தனது மகன்களான இன்பன், இனியன், நண்பர்களான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் வழக்கறிஞர் உதயகுமாருடன் சேர்ந்து தஞ்சாவூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தின் சொத்துகளை காமராஜ் வாங்கியதாக கூறப்படுகிறது...

அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் மகன்கள் பெயரில் ஒரு மெடிக்கல் சென்டரும், ஒரு நவீன பன்னோக்கு மருத்துவமனையையும் கட்டிய காமராஜ், மேலும் சில இதர வழிகள் மூலம் சுமார் 127 கோடி ரூபாய் சொத்துகளை முறைகேடாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கண்டுபிடித்தனர்

இது தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்களுக்கு சொந்தமான 51 இடங்களில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த அதிகாரிகள், தங்களின் புலன் விசாரணையை முடித்து, சுமார் 810 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும், 18,150 ஆவணங்களையும், தயார் செய்த நிலையில், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக சட்டமன்ற பேரவை தலைவரிடம் அனுமதி கோரியிருந்தனர்...

இதற்கான அனுமதி கிடைத்ததும், அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் கூட்டாளிகளான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டம் 1988 மற்றும் திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம் 2018 உடன் இந்திய தண்டனை சட்டத்தின் படி உரிய பிரிவுகளின் கீழ் திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்