உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து நபர் உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம்

x

உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து நபர் உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம்

சென்னை, உயர்நீதிமன்ற வளாகம் அருகே நேற்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வேல்முருகனின் உடலை வாங்க மறுத்தும் அவரது மனைவிக்கு அரசு வேலை கோரியும் அவரது உறவினர்கள் சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன்(42). இவர் மலைக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது மகன் 10 ஆம் படித்து வரும் சூழலில் அவரது பள்ளியில் சாதி சான்றிதழ் கோரி உள்ளனர்.

இதற்காக வேல்முருகன் தாலுகா அலுவலகத்திலும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பித்த நிலையில் அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, சாதி சான்றிதழ் கோரி அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திடம் மனு அளிக்க சென்ற போது ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் அவர்களின் சாதி சான்றிதழை ஸ்ரீபெரும்புதூர் அலுவலகத்தில் பெற்றுகொள்ள கூறி உள்ளார்.

இதனையடுத்து, சாதிசான்றிதழ் பெற அவர்கள் தாலுகா அலுவலகம் சென்ற போது அப்பெண் வேல்முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை தரக்குறைவாக பேசி உள்ளார்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான வேல்முருகன் நேற்று மாலை உயர்நீதிமன்ற வளாகம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து உயிரிழந்தவரின் மனைவி சித்ரா அளித்த பேட்டியில், சாதி சான்றிதழ் கேட்டு 5 வருடமாக அழைந்தோம்.

நீதி வேண்டும். எனது குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். சாதி சான்றிதழ் கோரிதான் எனது கணவர் உயிரிழந்தார். முதலமைச்சர் இதில் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

உயிரிழந்தவரின் தந்தை அளித்த பேட்டியில், மலைக்குறவர்கள் சமுதாயமான எங்களை நரிக்குறவர்கள் சமூகத்துடன் இணைத்து பேசக்கூடாது. எனது மருமகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். எனது மகன் 5 வருடமாக போராடி வந்தான்.

சிபாரிசுடன் செல்பவர்களுக்கே சாதிச்சான்றிதழ் வழங்குகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து மலைக்குறவர்களுக்கும் உடனடியாக சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்