பம்பு செட் ரூமில் திருடு போன பொருள்.. நொந்து போன விவசாயி..ஆனால் காத்திருந்த லக்

x

நேரம், காலம், வாய்ப்பு, அதிர்ஷ்டம் என இவை நம்மை கடந்து சென்றால் எப்படி திரும்ப வராதோ, அதேபோலத்தான் களவுபோன பொருளும்... ஆனால், திருடு போன இடத்திலேயே பொருள் மீண்டும் வந்து சேர்ந்தால்... மனது ஆச்சரியத்தால் சிலிர்க்கும் அல்லவா?... அப்படி ஒரு சம்பவம் தென்காசியில் அரங்கேறியுள்ளது. பாவூர்சத்திரம் அருகே உள்ள பூபாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நீல்செல்வகுமார். பொறியியல் பட்டதாரியான இவர், சில ஆண்டுகள் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

கொரோனா காலத்தில் தந்தை இறந்ததன் காரணமாக, தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை மேற்பார்வை செய்ய யாரும் இல்லாததால், தனது கல்லூரி விரிவுரையாளர் பணியை துறந்துவிட்டு, முழு நேர விவசாயியாக பணிபுரிந்து வருகிறார் நீல் செல்வகுமார். இதனிடையே, கடந்த 10ம் தேதி தனது தோட்டப் பணிகளை முடித்துவிட்டு, வழக்கம்போல மின் மோட்டார் இருக்கும் பம்பு செட் ரூமை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார் நீல் செல்வகுமார்.

மீண்டும் மறுநாள் காலையில் தோட்டத்திற்கு வந்து பார்த்தபோது, பம்பு செட்டிற்குள் வைக்கப்பட்டிருந்த மரம் அறுக்கும் இயந்திரம், பூச்சி மருந்து தெளிக்கும் இயந்திரம் மற்றும் எடை இயந்திரம் உள்ளிட்டவை மாயமானது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், விலை உயர்ந்த பொருட்கள் என்பதால், வேதனை அவரை ஆட்டிப்படைத்துள்ளது.

இந்த நிலையில், நீல் செல்வகுமாரை ஆச்சரியத்தில் மூழ்கடித்த சம்பவம், வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வாரம் கழித்து, வழக்கம் போல் தனது தோட்டத்திற்கு நீல்செல்வகுமார் சென்றபோது, பம்பு செட்டின் வாயில் பகுதியில் காணாமல் போன பொருட்கள் அனைத்தும் அதே இடத்தில் கிடந்தது ஆச்சரியம் கலந்த சிலிர்ப்பை அவருக்கு உருவாக்கியது.காணாமல் போன பொருட்கள் அனைத்தும் அப்படியே மீண்டும் கிடைத்ததால், மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற விவசாயி நீல் செல்வகுமார், வினோத கொள்ளையனுக்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்