மாணவர்களுக்கு ஜாக்பாட்! - எம்பிபிஎஸ் படிப்பில் காலியிடங்கள் - காரணம் என்ன?

x

மருத்துவ படிப்புக்கான காலி இடங்கள் விபரத்துடன், இரண்டாம் கட்ட கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் எம்பிபிஎஸ் படிப்பில் 401 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், பல் மருத்துவப் படிப்பில் 788 இடங்களும் என ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 189 இடங்கள் காலியாக உள்ளன என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % சிறப்பு ஒதுக்கீட்டில் 28 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்கள் அனைத்தும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படவுள்ளது மாணவர்களுக்கு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.

காலியிடங்கள் இருப்பதற்கான காரணியில், இவ்வாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண் குறைந்தது முக்கியமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை விடவும் இவ்வாண்டு ஒவ்வொரு பிரிவு மாணவர்களுக்கும், கட் ஆப் மதிப்பெண் 20 முதல் 25 மதிப்பெண்கள் வரை குறைந்ததால், 500 மதிப்பெண்களை தாண்டி இருந்தாலே இடம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதுபோக அதிக மதிப்பெண் பெற்ற தமிழக மாணவர்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திருக்கின்றனர். தமிழகத்தில் உள்ள மொத்த இடங்களில் 15 விழுக்காடு இடங்கள், அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கப்படுகிறது. அதன்படி எம்பிபிஎஸ் படிப்பில் 772 இடங்களும், பல் மருத்துவ படிப்பில் 30 இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் அதிக மதிப்பெண் பெற்ற தமிழக மாணவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை அதிகம் தேர்வு செய்யாமல், மாநில ஒதுக்கீட்டு இடங்களை தேர்வு செய்வார்கள். பிற மாநில மாணவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் நிலையிருந்தது. இவ்வாண்டு முதல் கட்ட கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் மாநில ஒதுக்கீட்டு இடங்கள் இரண்டையுமே தேர்வு செய்தவர்கள், இறுதியாக மாநில ஒதுக்கீட்டை ரத்து செய்து, அகில இந்திய ஒதுக்கீட்டை உறுதி செய்திருக்கின்றனர். இதன் காரணமாக மாநில ஒதுக்கீட்டு இடங்கள் காலி ஏற்பட்டுள்ளன.

அரசு ஒதுக்கீட்டு காலியிடங்களோடு, கூடுதலாக கணிசமான இடங்களுக்கு, தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. அந்த இடங்களும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன.
Next Story

மேலும் செய்திகள்