புழல் சிறையில் செந்தில்பாலாஜி எப்படி உள்ளார்..?

x

தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, புழல் சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு அவர் எப்படி உள்ளார் என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

கடந்த மாதம் 13ம் தேதி அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையின்போது, நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட செந்தில்பாலாஜி, நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே இருந்து வந்தார்.

இதனிடையே, நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டப்பூர்வமானது என நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வரும் 26-ம் தேதி வரை அவருக்கு நீதிமன்றக் காவல் நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, காவேரி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த செந்தில் பாலாஜி, மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, மாலை 6.30 மணியளவில் சிறைத்துறை மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டது.

அதன் பிறகு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில், தனி அறையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு செந்தில்பாலாஜிக்கு நவீன் என்ற மருத்துவர் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை அறையில் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, மருத்துவரின் அறிவுரைப்படியே செந்தில்பாலாஜிக்கு உணவு அளிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

மருத்துவரின் கண்காணிப்பு முடிந்த பிறகு, சிறையில் ஒதுக்கப்பட்டுள்ள முதல் வகுப்பு அறைக்கு செந்தில்பாலாஜி மாற்றப்படுவார் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்