""அன்று அமைச்சருடன் கடும் மோதல்.. இன்று மக்களிடம் சர்ச்சை பேச்சு" - திமுக உரசும் கூட்டணி கட்சி MP.. தீயாய் பரவும் வீடியோ

x

தண்ணீர் வரவில்லையென்றால் சாலை மறியலில் ஈடுபடுங்கள் என ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி பேசி வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

திமுகவுடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து பிரியாமல் இருப்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தான். ஆனால் ராமநாதபுரத்தில் அந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டு விடுமோ என எண்ணும் அளவிற்கு, எம்.பி. நவாஸ்கனிக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா, எம்.பி.நவாஸ் கனி வருவதற்கு முன்னரே தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவர், ஏன் முன்னதாகவே தொடங்கினீர்கள் என அமைச்சருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனிடையில், தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட போது தடுக்க வந்த மாவடட் ஆட்சியரை நவாஸ்கனி எம்.பி.யின் ஆதரவாளர் ஒருவர் கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு சற்று தணிந்த நிலையில், மீண்டுமொரு சர்ச்சையை கிளப்பியுள்ளார் எம்.பி. நவாஸ் கனி. திருப்பாலைக்குடியில் பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு சென்ற எம்.பி. நவாஸ் கனியிடம், குடிதண்ணீர் வருவதில்லை என பொதுமக்கள் குறைகளை கொட்டித்தீர்த்துள்ளனர்.

இதையெல்லாம் கேட்ட எம்.பி. நவாஸ் கனி, தண்ணீர் வரவில்லை என்றால் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடுங்கள் என பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே அமைச்சருக்கும், எம்பிக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில், மக்களை போராட்டம் நடத்த தூண்டி விடுவது போல பேசிய வீடியோவும் வெளியாகியது இரு கட்சி மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்